மேலும் 2 பொருட்கள் மிதப்பதை சீன செயற்கைக்கோள் கண்டுபிடித்தது

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் மேலும் 2 பொருட்கள் மிதப்பதை சீன செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது.
                                              
தேடுதல் வேட்டை

5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம், கடந்த 8–ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமானது.

இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் 26 நாடுகளின் விமானங்கள், கப்பல்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. மேலும் சில நாடுகளின் செயற்கைக்கோள்களும் இந்த தேடும் பணியில் இணைந்துள்ளன.

விமானங்கள்–கப்பல்கள்

இந்தநிலையில், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்களை போன்ற 2 பொருட்கள் மிதப்பதை ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் படம் பிடித்தது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவில் அந்த பொருட்கள் மிதப்பதாக அறிவித்த ஆஸ்திரேலிய பிரதமர், அது விமானத்தின் பாகம் தானா? என்பது அங்கு சென்று பார்த்த பிறகு தான் தெரியவரும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 6 விமானங்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மேலும் 2 சரக்கு கப்பல்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. இதைப்போல இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்களும், ஆஸ்திரேலியா, சீனா நாடுகளின் கப்பல்களும் அந்த பகுதிக்கு விரைந்துள்ளன.

செயற்கைக்கோள் படம் பிடித்த பகுதியில் நேற்றும் வானிலை சீராக இருந்ததால், மீட்புக்குழுவினரால் 10 கி.மீ. தூரம் வரை தெளிவாக பார்க்க முடிந்தது. எனவே மீட்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிதாக 2 பொருட்கள்

இதற்கிடையே, இந்த பொருட்கள் கிடந்த பகுதியில் இருந்து 120 கிலோ மீட்டருக்கு தெற்கே, மேலும் 2 பொருட்கள் கிடப்பதை சீன செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பகலில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், சுமார் 22.5 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பொருளும், மற்றொரு அகலமான பொருளும் கடலில் மிதப்பது தெரியவந்தது.

இது குறித்து மலேசியாவுக்கு சீனா தகவல் தெரிவித்துள்ளது. இதை உறுதி செய்த மலேசிய ராணுவ மந்திரி ஹிசாமுதின் உசேன், அந்த பொருட்கள் விமானத்தின் உடைந்த பாகங்களா? என்பதை ஆய்வு செய்ய சீனா கப்பல்களை அனுப்பும் என்று கூறினார்.

கறுப்பு பெட்டி

மேலும், விமானத்தின் கறுப்பு பெட்டியில் உள்ள பேட்டரி 30 நாட்களுக்குப்பின் செயலிழந்து விடும் என்று கூறிய அவர், அதற்குப்பின் அதிலிருந்து எந்த தகவலும் பெற முடியாது என்றும் தெரிவித்தார். எனவே விமானத்தை விரைந்து கண்டுபிடிக்கும் நோக்கில், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.