காந்திநகரில் போட்டி: அத்வானி முடிவு

குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக எல்.கே.அத்வானி அறிவித்துள்ளார்.முன்னதாக, தாம் போபாலில் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று கூடிய பாஜகவின் மத்திய தேர்தல் செயற்குழுக் கூட்டத்தில், அத்வானி மீண்டும் காந்திநகரில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அத்வானி வருத்தத்தில் இருந்ததாகவும், அவர் போபாலில் போட்டியிடவே விரும்புவதாகவும் மீண்டும் தகவல்கள் வெளியாகின.
                               
                                 

இந்நிலையில், அத்வானியை சமாதானப் படுத்தும் முயற்சியில் வெங்கய்யா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோரைத் தொடர்ந்து நரேந்திர மோடியும் அத்வானியிடம் பேசினார்.

அவர் மீண்டும் காந்திநகர் தொகுதியிலேயே போட்டியிடலாம் என்றும், அவரது வெற்றிக்கு தொண்டர்கள் உழைப்பார்கள் என்றும் அவரிடம் உறுதி கூறப்பட்டது. இதை அடுத்து, கட்சித் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், அத்வானியுடன் பேசி, அவருக்கு எந்தத் தொகுதி விருப்பமோ அதில் போட்டியிடலாம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மாலை தாம் மீண்டும் குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக அத்வானி தெரிவித்துள்ளார். இதை அடுத்து, அத்வானியின் தொகுதி மீதான சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக, நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் அத்வானி வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் அவர் கட்சிக்கு தனது எதிர்ப்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தாம் மீண்டும் மோடி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத் தொகுதியில் போட்டியிட்டால் அது தனது வெற்றிக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று அவர் கருதியதாகவும், சிறப்பாக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட்டால் அது தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அத்வானி கருதினார் என்று தகவல் வெளியானது. மேலும், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அத்வானிக்கு மிக நெருக்கமானவர் என்பதால், தமது வெற்றிக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கருதியதாகவும் தெரிகிறது.

ஆனால், மோடி ஆட்சி செய்யும் குஜராத்தை விட்டு அத்வானி விலகிச் செல்வது, மோடி மீதான எதிர்மறை எண்ணத்தை மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தி அவை அத்தகைய பிரசாரத்தை முன்னெடுக்கும் என்று கூறப்பட்டது. இது, பாஜக வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விளக்கப்பட்டது.

கட்சி மேலிடத்தின் விளக்கத்தை அத்வானி ஏற்றுக் கொண்டார் என்றும், இருந்தாலும், அத்வானியின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் கட்சித் தலைமை கூறியது.

இந்நிலையில், தாம் காந்திநகரிலேயே போட்டியிடுவது என்ற முடிவுக்கு தாம் வந்ததாக அத்வானி தெரிவித்துள்ளார்.