மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றும் பெண்

விமானம், படகு, கார், இருசக்கர வாகனம் ஆகியவை மூலம் சிலர் உலகை சுற்றி வந்து சாதனை படைத்திருக்கிறார்கள். இப்போது ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து உலகை சுற்றிவர தீர்மானித்திருக்கிறார். இவரது இந்த பயணம் வெற்றிகரமாக கைகூடினால் இருசக்கர வாகனத்தில் உலகை சுற்றிய முதல் பெண் என்ற பெருமை பெறுவார். இவரது பெயர் ஸ்டீப் ஜீயாவன்ஸ் (38). இங்கிலாந்து நாட்டிலுள்ள வடக்கு வேல்ஸ் பகுதியில் வசிப்பவர். லண்டன் நகரில் இருந்து இம்மாதம் 23–ந்தேதி தனது பயணத்தை தொடங்குகிறார்.
                                                 

மொத்தம் 15 மாதங்களில் 42 நாடுகள் வழியாக 56 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறார். முதலில் ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளை சுற்றி முடிந்ததும், துருக்கி, ஈரான், ஐக்கிய அரபு குடியரசு, இந்தியா, நேபாளம், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை வலம் வந்த பிறகு சொந்த நாடு திரும்புகிறார். இந்த பயணத்திற்கு சுமார் ரூ.10 லட்சம் செலவாகும் என கணக்கிட்டுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை ஏழைகளின் பசியை போக்கும் திட்டத்துக்கு வழங்க இருப்பதாக அவர் கூறுகிறார்.