தமிழகம் முழுவதும் நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், நாளை, 29ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஏப்., 5ம் தேதி வரை, மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, அசாமில், ஐந்து மற்றும் திரிபுராவில், ஒரு தொகுதிக்கும், ஏப்., 7ம் தேதி, தேர்தல் நடக்கிறது. இத்தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல், இம்மாதம், 21ம் தேதியுடன் முடிந்தது.
                                          
 வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 24ம் தேதி, வேட்பாளர் இறுதி பட்டியல், வெளியிடப்பட்டது. இரண்டாவது கட்டமாக, மிசோரம், அருணாசல பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில், தலா இரண்டு தொகுதிகளுக்கும், மணிப்பூர், நாகாலாந்தில், தலா ஒரு தொகுதிக்கும், ஏப்., 9ம் தேதி, தேர்தல் நடக்கிறது. மறுநாள், 71 தொகுதிகளுக்கும்; ஏப்., 12ம் தேதி, 32 தொகுதிகளுக்கும்; ஏப்., 17ம் தேதி, 79 தொகுதிகளுக்கும்; ஆறாவது கட்டமாக, ஏப்., 24ம் தேதி, 117 தொகுதிகளுக்கும், தேர்தல் நடக்கிறது.

மனு தாக்கல்:

ஆறாவது கட்ட தேர்தலில், தமிழகத்தில், 39 தொகுதிகளும், புதுச்சேரி, ஒரு தொகுதியும் அடங்கும். இந்த தொகுதிகளில் இம்முறை, பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ், 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடுகின்றன

இவை தவிர, தி.மு.க., - பா.ஜ., கூட்டணிகள், 40 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள், 18 தொகுதிகளிலும், 'ஆம் ஆத்மி' கட்சி, 25 தொகுதிகளிலும், போட்டியிடுகின்றன. பல முனை போட்டி காரணமாக, இம்முறை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லோக்சபா தொகுதிகள் தவிர, இடைத்தேர்தல் நடக்கும் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், நாளை, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. அடுத்த மாதம், 5ம் தேதி வரை, மனு தாக்கல் செய்யலாம். ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை, தெலுங்கு வருடப் பிறப்பு காரணமாக, விடுமுறை நாள். மற்ற நாட்களில், காலை, 11:00 மணியில் இருந்து, மாலை, 3:00 மணி வரை, மனு தாக்கல் செய்யலாம்.

விதிமுறைகள்

* தேர்தலில் போட்டியிட, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்; 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

* சுயேச்சையாக போட்டியிடுபவரின், வேட்பு மனுவை, 10 பேர் முன்மொழிய வேண்டும். அவர்களுடைய பெயர், வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும்.

* வேட்பு மனுவில் கேட்கப்பட்ட விவரங்களை, வேட்பாளர் முழுமையாக தெரிவிக்க வேண்டும். ஆம், இல்லை என்றாவது பதில் அளிக்க வேண்டும்; கோடிட்டு செல்லக் கூடாது.

* வேட்பாளருடன், தேர்தல் அலுவலர் அறைக்குள், நால்வர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

* வேட்பு மனு தாக்கல் நடைபெறும் அலுவலகத்தில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவிற்குள், வேட்பாளருடன் மூன்று வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

* வேட்பு மனு தாக்கலுக்கு முன், வேட்பாளர் ஊர்வலம் நடத்த விரும்பினால், முறையாக போலீசாரிடம், அனுமதி பெற வேண்டும். ஊர்வலத்திற்கான செலவு, வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.

* வேட்பாளருடன், முன்மொழி பவர்கள்

செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல், வேட்பாளர் மனு தாக்கல் செய்ய, நேரில் செல்லா விட்டால், நீதிபதி அல்லது பிரமாண ஆணையர் அல்லது நோட்டரி பப்ளிக் முன்னிலையில், பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு, முகவரிடம் கொடுத்து அனுப்ப வேண்டும்.

* சிறையிலிருப்பவர் போட்டியிட விரும்பினால், சிறை கண்காணிப்பாளரிடமும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர், மருத்துவமனை டாக்டரிடமும், கையெழுத்து பெற்ற, பிரமாண பத்திரத்தை, முகவரிடம் கொடுத்து அனுப்பலாம்.

* பிரமாண பத்திரத்தை, இணையதளம் மூலமாகவும், பதிவு செய்யலாம்.

* சான்றளிக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தை, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான, கடைசி நாளான, ஏப்., 5ம் தேதி மாலை, 3:00 மணிக்குள், தேர்தல் அதிகாரியிடம், தாக்கல் செய்ய வேண்டும்.