சிங்கப்பூரில் இந்திய கட்டுமான ஊழியர் மரணம்

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் ஒருவர் நேற்று மதியம் சுமார் 3 மணி வாக்கில் தெம்பனிஸில் உள்ள கட்டுமானத் தளத்தில் பாரவண்டியின் அடியில் சிக்கி மாண்டுபோனார். காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் நேற்று முன் தினம் மதியம் 3 மணிக்குச் சற்று முன்பாக, சம்பவம் குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
                                     
தெம்பனிஸ் இண்டஸ்ட்ரியல் அவென்யூ 2, தெம்பனிஸ் அவென்யூ 1 ஆகியவற்றின் சந்திப்பில் அமைந்திருக்கும் கட்டுமானத் தளத்தின் நுழைவாயிலுக்கு அருகே இந்த விபத்து நேர்ந்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது 27 வயதான கட்டுமான ஊழியர் பாரந்தூக்கி வண்டியின் முன் சக்கரத்தின் அடியில் சிக்கியிருந்தார் (படம்). அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் மாண்டுபோனதாக அறிவிக்கப்பட்டது. கவனக்குறைவால் விபத்து ஏற்படுத்தியதற்காக 30 வயதான இந்திய நாட்டவரான பாரவண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்; விசாரணை தொடர்கிறது.