TNPSC குரூப் 2A எழுத்துத் தேர்வு ஜூன் 29 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2A தொகுதிக்கு கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வி.சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
                                                  

அதன் விவரம்: அரசின் பல்வேறு துறைகளில் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் வருகின்றன. 2 ஆயிரத்து 269 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு மே 18 -ஆம் தேதி நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிந்து, மே 16 -ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, குரூப் 2ஏ எழுத்துத் தேர்வு மே 18 -ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 29 -ஆம் தேதி நடைபெறும் என்று தனது அறிவிப்பில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சோபனா தெரிவித்துள்ளார்.