மே 1ல் உயர்கிறது ஆம்னி பஸ் கட்டணம்

பெங்களூருவில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில், பிற நகரங்களுக்கு இடையிலான கட்டண உயர்வு, வரும் 1ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது.
                                     
அரசு அனுமதி:

தமிழகத்தில், மாநில அரசு அனுமதியுடன், 810, மத்திய அரசு அனுமதி பெற்று, 263 பஸ்கள் என, 1,073 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களின் வசதிகளுக்கு ஏற்ப, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது.தற்போது, கோடை விடுமுறை என்பதால், ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை பயன்படுத்தி பஸ் உரிமையாளர்கள், கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். 

டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தனர். லோக்சபா தேர்தலை காரணம் காட்டி, கட்டண உயர்வுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை போட்டது. தேர்தல் முடிந்ததை அடுத்து, ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக, பெங்களூருவில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.சாய்வு வசதி உடைய பஸ்சுக்கு, 20 ரூபாய், 'வால்வோ' சாய்வு வசதி பஸ்சுக்கு, 30 ரூபாய், ஏ.சி., படுக்கை வசதி, வால்வோ படுக்கை வசதி பஸ்களுக்கு, 50 ரூபாய் என, கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக, பெங்களூருவில் இருந்து, திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சாய்வு வசதி பஸ் கட்டணம், 750 ரூபாயிலிருந்து, 770 ரூபாயாகவும், சாய்வு வசதி உடைய ஏ.சி., வால்வோ பஸ் கட்டணம், 1,090 ரூபாயிலிருந்து, 1,120 ரூபாயாகவும், ஏ,சி., படுக்கை வசதி, 1,150 ரூபாயிலிருந்து, 1,200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.