உலக கோப்பை டுவென்டி 20: பைனலில் இலங்கை

உலக கோப்பை டி20 போட்டித் தொடரின் முதலாவது அரை இறுதியில், டி/எல் விதிப்படி 27 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இலங்கை பைனலுக்கு தகுதி பெற்றது.மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக குசால் பெரேரா, தில்ஷன் களமிறங்கினர். இந்த ஜோடி 4 ஓவரில் 41 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. குசால் 26 ரன் எடுத்து (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) சான்டோகி பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
                                       
அடுத்து வந்த அனுபவ வீரர் ஜெயவர்தனே ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து சங்கக்கரா 1 ரன் மட்டுமே எடுத்து பத்ரீ பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணி 6.2 ஓவரில் 49 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. தில்ஷன் திரிமன்னே ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 42 ரன் சேர்த்தது. தில்ஷன் 39 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார்.

திரிமன்னே 44 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மேத்யூஸ் 40 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. சீக்குகே பிரசன்னா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கிறிஸ் கேல் 3, வேய்ன் ஸ்மித் 17 ரன் எடுத்து மலிங்கா வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேற, அந்த அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த லெண்டில் சிம்மன்சும் 4 ரன்னில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி 7.1 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில் சாமுவேல்ஸ் வேய்ன் பிராவோ ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. ஓரளவு தாக்குப்பிடித்த பிராவோ 30 ரன் எடுத்து (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) குலசேகரா பந்துவீச்சில் ஜெயவர்தனே வசம் பிடிபட்டார். 40 பந்தில் 84 ரன் தேவை என்ற நெருக்கடியான கட்டத்தில், கேப்டன் சம்மி உள்ளே வந்தார்.

வெ.இண்டீஸ் 13.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்த நிலையில், திடீரென கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. சாமுவேல்ஸ் 18, சம்மி 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை தொடர்ந்து கொட்டியதால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 27 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றத்துடன் வெளியேறியது.