பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் விண்ணில் இன்று ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.
                                      பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் விண்ணில் இன்று ஏவப்படுகிறது

கடந்த ஜூலை 1-ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து அதை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-2 என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.14 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 58½ மணிநேர 'கவுண்ட்டவுன்' கடந்த 2-ந்தேதி காலை 6.44 மணிக்கு தொடங்கியது.

இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைகோள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.

இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 வருடம். இதேபோல் இன்னும் 5 செயற்கை கோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது.

முன்னதாக ராக்கெட்டை செலுத்துவதற்கான ஒத்திகை கடந்த 1-ந்தேதி வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.