கூடங்குளத்தில் ரூ.33 ஆயிரம் கோடி செலவில் மேலும் 2 அணு உலைகள்

கூடங்குளத்தில், ரூ.33 ஆயிரம் கோடி செலவில் மேலும் 2 அணுஉலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
                                            

மேலும் 2 அணுஉலைகள்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகளில், முதல் அணுஉலையில் ஏற்கனவே மின் உற்பத்தி தொடங்கி விட்டது. 2–வது அணுஉலையில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு, ரஷியாவின் உதவியுடன் மேலும் இரு அணுஉலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் அணுஉலை விபத்து இழப்பீடு தொடர்பான பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முட்டுக்கட்டை உண்டாகி ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போனது.

முட்டுக்கட்டை நீங்கியது

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த மாதம் அணுசக்தி துறை செயலாளர் ஆர்.கே.சிங் தலைமையிலான குழுவினர் ரஷிய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீங்கியது. அதன்பிறகு ஒப்பந்தத்துக்கு, பாதுகாப்பு துறைக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், ஒப்பந்தம் மேற்கொள்ள தேர்தல் கமிஷனின் அனுமதியும் பெறப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்து

இதைத்தொடர்ந்து, கூடங்குளத்தில் ரூ.33 ஆயிரம் கோடி செலவில் மேலும் 2 அணுஉலைகள் (3–வது மற்றும் 4–வது அணுஉலைகள்) அமைப்பது தொடர்பாக இந்தியாவுக்கும் (இந்திய அணுமின் கழகம்), ரஷியாவுக்கும் இடையே நேற்று முன்தினம் ஒப்பந்தம் கையெழுத்தானதாக நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும் அணுஉலைகளை அமைப்பது தொடர்பான பணிகளை தொடங்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதியை பெற வேண்டி இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.அணுஉலை விபத்து இழப்பீடு சட்டத்தின்படி, ஏதாவது விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1,500 கோடிக்கும் அதிகமான தொகையை காப்பீடு செய்ய வேண்டும். அதன்படி காப்பீடு செய்ய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.