காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: சென்னை ராணுவ அதிகாரி பலி; 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்

காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

                                               
இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுத படையினரும் நேற்று முன்தினம் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி தாக்கியதில் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.

சென்னையைச் சேர்ந்தவர்

தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் மனைவி கீதாவுடன் வசித்து வருகிறார்.

இந்த தம்பதியின் ஒரே மகன் முகுந்த். ராணுவ மேஜரான முகுந்திற்கு கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் இந்து. இவர்களுக்கு 3 வயதான அர்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். பெங்களூரில் ராணுவ குடியிருப்பில் வசித்து வருகின்றனர். முகுந்தின் சொந்த ஊர் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு கிராமம். முகுந்துக்கு சுவேதா, நித்யா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஐ.நா. அமைதிப்படை

ராணுவ மேஜர் முகுந்த் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கரா கல்லூரியில் பி.காம் படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஊடக துறையில் பி.ஜி.டிப்ளமோ படித்தார். அதன்பிறகு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமியில் சேர்ந்து ராணுவ மேஜராக 44–வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் சேர்ந்தார். 2012–ல் ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படையில் லெபனானில் பணியாற்றினார். அதன் பின்னர் காஷ்மீரில் ராணுவ மேஜராக பணியாற்றி வந்தார்.

தீவிரவாதிகள் தாக்குதலில் மேஜர் முகுந்த் பலியான சம்பவம், அவரது தந்தை வசிக்கும் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டுக்காக பணியாற்றி வீரமரணம் அடைந்த முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா ஆகியோருக்கு உறவினர்கள், குடியிருப்பு வாசிகள் ஆறுதல் கூறினார்கள்.

உடல் இன்று வருகிறது

மேஜர் முகுந்தின் உடல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு இரவு கொண்டு வரப்படுகிறது.

நாளை (திங்கட்கிழமை) மேஜர் முகுந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் குரோம்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

தந்தை கண்ணீர்

தனது மகன் மேஜர் முகுந்தின் வீரமரணம் குறித்து வரதராஜன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:–

முகுந்த் பி.காம். முடித்தவுடன் எம்.பி.ஏ. படிக்க வைக்க முடிவு செய்தபோது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்றப்போவதாக தெரிவித்தான். என் சகோதரிகளின் கணவன்மார்கள் ராணுவத்தில் உள்ளனர். அவர்களை பார்த்து, 3–வது படிக்கும்போதே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.

ஒரே மகனை ராணுவத்துக்கு அனுப்புவதில் என் மனைவிக்கு வருத்தம் இருந்தபோதும், முகுந்த் ராணுவத்தில் பணியாற்றுவதில் லட்சியமாக இருந்ததால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்னை நன்றாக கவனித்துக்கொள்வான். எனக்கு தைரியம் அளிப்பவனாக இருந்தான். என் மீது மிகவும் அன்பாக இருப்பான். சபரிமலை கோவிலுக்கு செல்லும்போது நானும், அவனும் தான் செல்வோம். என் பின்னால், நான் விழுந்து விடாதவாறு பிடித்துக்கொண்டே வருவான்.

பிறந்த நாள் வாழ்த்து

கடந்த 12–ந் தேதி முகுந்துக்கு பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அன்று காலை அவனை செல்போனில் தொடர்புகொண்டேன். பேசவில்லை. மாலையில் அவனே பேசினான். தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்ததால் போனை எடுக்க முடியவில்லை என கூறினான். அவனுக்கு நானும், எனது மனைவியும் பிறந்தநாள் வாழ்த்து கூறினோம். இது தான் நாங்கள் என் மகனிடம் கடைசியாக பேசியது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் எனது சம்பந்தி டாக்டர் ஜார்ஜ் வர்க்கீஸ் போனில் என்னுடன் பேசி முகுந்த் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக ‘பேஸ்புக்’கில் தகவல் இருப்பதாக கூறினார்.

நான் பெங்களூரில் இருக்கும் மருமகள் இந்துவிற்கு போன் செய்தபோது எடுக்கவில்லை. நேற்று காலை என் மகன் செல்போனுக்கு தொடர்புகொண்டேன். அப்போது யாரும் எடுக்கவில்லை. அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்ட ராணுவ அதிகாரிகள் முகுந்ந் இறந்த தகவலை தெரிவித்தனர். வேறு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

எனக்கு மகனாக மட்டும் இல்லாமல் தந்தையாக, நண்பனாக இருந்தவன் என் மேல் அன்பு கொண்டவன் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்துள்ளான். அவன் புண்ணியம் செய்தவன்.

இவ்வாறு கூறிய வரதராஜன் கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.