மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை திணறடித்த 5 வயது சிறுவன்

முன்னணி கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் "எக்ஸ்பாக்ஸ்' விளையாட்டுக் கணக்கை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கும் பாதுகாப்பு வளையத்தை ஐந்து வயது சிறுவன் ஒருவன் சாமர்த்தியமாக உடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளான்.

                 
அமெரிக்காவின் சான் டைகோ நகரைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் வான் ஹùஸல் என்ற அந்தச் சிறுவன், கணினியில் தனது தந்தைக்குத் தெரியாமல் அவரது "எக்ஸ்பாக்ஸ்' கணக்கைத் திறக்க முயன்றுள்ளான்.

ஆனால், அதற்கான கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) இல்லாததால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையில் விசைப்பலகையில் "ஸ்பேஸ்' விசையை சிலமுறை தட்டிவிட்டு பிறகு "என்டர்' விசையைத் தட்டியுள்ளான்.

தன்னிச்சையாக நிகழ்ந்த இந்தச் செயலால், எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுக்குள் நுழைய முடிந்ததை சாதுரியமாகப் புரிந்துகொண்ட சிறுவன், அந்த உத்தியைப் பயன்படுத்தி பல நாள்கள் தொடர்ந்து அதில் விளையாடியிருக்கிறான்.

மகனின் "திருவிளையாடலை' ஒருநாள் கவனித்துவிட்ட அவனது தந்தை, இந்த விவகாரத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அந்த மென்பொருளின் பாதுகாப்பு வளைய வடிவாக்கத்தில் நேர்ந்திருந்த தவறைத் திருத்திக்கொண்ட அந்நிறுவனம், அதற்கு உதவிய அந்தச் சிறுவனுக்கு 50 டாலர் (ரூ.3000) அன்பளிப்பையும், ஓராண்டு முழுவதும் எக்ஸ்பாக்ஸ் விளையாடுவதற்கான இலவசக் கணக்கையும் வழங்கி கெளரவித்துள்ளது.