சொந்தமா வீடு கட்டுறீங்களா? இதையெல்லாம் கவனிக்க மறக்காதீங்க!

பணம் குறைவு, உடனடியாக குடியேறலாம் என்பதால் பிளாட் வாங்குவதுதான் இப்போது பிரபலமாகிவிட்டது. இருந்தாலும், தனி வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையுள்ள பலர், நகரத்தை விட்டு வெகு தொலைவு சென்றாலும், ஒரு கால் கிரவுண்ட் வாங்கியாவது வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சிலர் பூர்வீக இடம் இருந்தால் அதில் வீடு கட்ட திட்டமிடுவார்கள். 

                                    

எப்படியோ, வீடு கட்டுபவர்கள் சில விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். மனையை சதுரம் செய்யும்போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்கவேண்டும். அஸ்திவாரம் அமைக்கும்போது மண் பிடிமானம் இல்லாவிட்டால் திமிசு கட்டையால் நன்றாக அடித்தபிறகு கான்கிரீட் போடவேண்டும்.

அஸ்திவாரத்துக்கு பதிலாக பில்லர் அமைத்து வீடு கட்டுபவர்களுக்கு பிரச்னை இருக்காது. நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளரை தேர்வு செய்து பணியை ஒப்படைத்தால் கட்டுமானம் காலாகாலத்துக்கு நிலைத்து நிற்கும். உங்கள் மேற்பார்வையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றால், எல்லா நிலைகளிலும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்தப்படுகிறதா என கவனியுங்கள். அஸ்திவாரம், பெல்ட் லிண்டல், கான்கிரீட் என அனைத்து கட்டுமான நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். கதவு ஜன்னல் பொருத்தும்போதும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்துவது அவசியம். செங்கற்களை தண்ணீரில் நனைத்த பிறகே கட்ட அனுமதிக்கவேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போது முடிவில் குத்துக்கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.

சுவர் கட்டும்போதும் இணைப்பு வரும்போதும் கண்டிக்கல் உடைத்துப்போட்டு கட்ட வேண்டும். ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்டுவதற்கு பெரும்பாலும் அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் தரம் குறையாமல் இருக்கும். செங்கல் சுவருடன் காலம் பீம் இணைக்கும்போது கம்பி வலை வைத்து கட்ட வேண்டும். கலவையின்போது மணல், ஜல்லி சிமெண்ட், தண்ணீர் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். குறிப்பாக மணலை நன்றாக சலித்துவிட்டே கட்டவேண்டும். கட்டிடத்துக்கு காலை, மாலை இருவேளையும் தண்ணீர் விடப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

படிகள் அமைக்கும்போது, அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளதா என பாருங்கள். எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும்போது அனைத்து இடத்திலும் சம அளவு உயரம் இருக்கவேண்டும். எந்த இடத்தில் என்ன மின்சாதனம் வைக்கப்போகிறீர்கள். மின்விசிறி, லைட் எங்கு அமைப்பது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப எலக்ட்ரிக் பாயின்ட், சீலிங் கிளாம்புகள் அமைக்க வேண்டும்.