கும்மிடிப்பூண்டி அருகே பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது

கும்மிடிப்பூண்டி அருகே பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். திருமணத்திற்கு தரைடயாக இருந்ததால் குத்தி கொன்றதாக கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்தார்.
                                       

குத்திக்கொலை

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 36). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா ( 30). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று பிற்பகல் கவரைப்பேட்டையை அடுத்த கனகம்பாக்கம் மற்றும் கொள்ளூர் கிராமத்திற்கு இடையே ஆள்நடமாட்டம் இல்லாத ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் இளம்பெண் கவிதா முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்தார்.

கத்திக்குத்தால் படுகாயம் அடைந்த கவிதாவை ஆம்புலன்சில் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதலன் பிடிபட்டார்

போலீஸ் விசாரணையில் கவிதாவின் செல்போனுக்கு காலையில் இருந்து தொடர்ந்து 8 முறை ஏ.என்.குப்பம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் முத்தையா (வயது 28) என்பவர் தொடர்பு கொண்டது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு வாலிபர் முத்தையா தலைமறைவாகி போனதும் போலீசாருக்கு சந்தேகத்தை மேலும் உறுதி செய்ய வழிவகை செய்தது. இதனையடுத்து சப்–இன்ஸ்பெக்டர்கள் நரேஷ், முனிவேல், அலமேலு ஆகியோர் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. அவர்கள் வாலிபர் முத்தையாவை மடக்கி பிடித்தனர்.

போலீஸ் விசாரணையில் வாலிபர் முத்தையா கூறியதாவது:–

எனது வீட்டின் எதிரே வசிக்கும் பாபுவின் மனைவி கவிதாவுக்கும் எனக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். அதே சமயத்தில் பெற்றோர்களின் விருப்பத்தின்படி, நான் தேர்வாய் கிராமத்தில் உள்ள எனது மாமா மகளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

திருமணத்திற்கு தடை

இந்த நிலையில் எனது கள்ளக்காதலியான கவிதா, என்னை வேறு யாருக்கும் விட்டு தர மாட்டேன் என்று கூறி எனது திருமணத்திற்கு தடையாக இருந்து வந்தார். எனக்கு அமைய உள்ள புது வாழ்க்கைக்கு கவிதா எதிர்ப்பு தெரிவித்து வருவதை கண்டு அவர் மீது நான் ஆத்திரம் கொண்டேன். இதனையடுத்து செல்போனில் பேசி கவிதாவை சம்பவ இடத்திற்கு வரவழைத்து கத்தியால் குத்தி கொலை செய்தேன்.

இவ்வாறு வாலிபர் முத்தையா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணத்திற்கு தடையாக இருந்த கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் முத்தையாவை கைது செய்தனர்.