'தெனாலிராமன்' படம்: நடந்தது என்ன?

கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன் ஆகியோரை தமிழர்கள் நன்கு அறிந்தவர்கள். கிருஷ்ண தேவராயரை மகாராஜாவாகவும், தெனாலிராமனை சிறந்த விகட கவியாகவும் போற்றுபவர்கள். அவர்களைப் பற்றி, நடிகர் வடிவேலு நடித்து, தமிழகத்தில் திரையிடப்பட உள்ள, 'தெனாலிராமன்' படம், வரலாற்றை திரித்துக் கூறுவதோடு, கொச்சைப்படுத்துவதாக உள்ளது என, பெரும் சர்ச்சை எழுந்தது.
                                          


'படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்' என, தெலுங்கு மக்கள் பேரவை, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி ஆகிய அமைப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பால் வசந்தகுமார், சத்திய நாராயணா ஆகியோர், இருதரப்பினரும் பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
'தெனாலிராமன்' படம் தொடர்பாக நடந்தது என்ன என்பது பற்றி, வழக்கு தொடர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி கூறியதாவது: கிருஷ்ண தேவராயர் மாபெரும் பேரரசராக விளங்கியவர். இந்து மதத்தின் வளர்ச்சிக்கும், திராவிட மொழி வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள், இவரது ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி பெற்றன. கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, கோவில்களைக் கட்டி, மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தார். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், இன்று இருக்கும் கோவில்களில், தேவராயர் கட்டிய கோவில்கள் பிரசித்தி பெற்றவை. கிருஷ்ண தேவராயர் அரசில், விகட கவியாக இருந்தவர் தெனாலிராமன், சிக்கலான பிரச்னைகளைக் கூட, தன் புத்தி கூர்மையாலும், விளையாட்டாகவும் தீர்த்து வைத்தார். தெலுங்கு மக்கள் மத்தி யில் மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியிலும், தெனாலி ராமன் புகழ் பெற்றவர்; சிறு குழந்தைகளை ஈர்க்கும் வசீகர சக்தி பெற்றவர். இவர்களைப் பற்றிய படமாக, கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்தினர், 'தெனாலிராமன்' படத்தை வெளியிடுகின்றனர். இதில், '36 மனைவியும், 52 குழந்தைகளும்' என, சொல்கின்றனர். தெனாலிராமனுக்கு இவ்வளவு மனைவியரும், குழந்தைகளும் இல்லை. இதனால், தெனாலிராமனையும், கிருஷ்ண தேவராயரையும் கொச்சைப்படுத்துவதாக, அச்சம் ஏற்பட்டது.
'படத்தை வெளியிடுவதற்கு முன், எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்; கொச்சைப்படுத்தும் வாசகங்கள், வரலாற்றை திரிக்கும் சம்பவங்கள் இருந்தால் அதை நீக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தோம். இதையடுத்து, படக் குழுவினரும், நடிகர் வடிவேலுவும் எங்களுடன் பேச்சு நடத்தினர். அதில், '36 மனைவிகளும், 52 குழந்தைகளும்' என்ற வரியை நீக்குவதாக ஒப்புக்கொண்டனர். மேலும், படத்தின் துவக்கத்திலேயே, 'படத்தின் கதாபாத்திரங்கள், யாரையும் குறிப்பதோ, விமர்சிப்பதோ அல்ல' என, அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இப்படத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்திய, தெலுங்கு அமைப்பினர், திடீரென்று பின்வாங்கி விட்டனர். அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது