கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம்... ரஜினிகாந்த்

சம்மர்  ஸ்பெஷலாக ரிலீசாக உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அனிமேஷன் படமான கோச்சடையான் நான்கு மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ‘கோச்சடையான்' படம் ‘விக்கிரமசிம்மா' என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரிவியூ காட்சி வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. 

                                          

அந்த விழாவில் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் சவுந்தர்யா, தாசரி நாராயண ராவ், ராமநாயுடு, நடிகர் மோகன் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். கோச்சடையான் படத்தில் பாடலொன்றைப் பாடியுள்ள ரஜினியின் மனைவி லதா விழாவில் கவுரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

சினிமா டெல்க்னாலஜி தெரியாது... எனக்கு சினிமா பற்றிய டெக்னாலஜி எதுவும் தெரியாது. சினிமா எப்படி எடுப்பார்கள் என்றுகூட தெரியாது. இருந்தாலும் டெக்னாலஜிகளுடன் கூடிய படத்தில் நடித்துள்ளேன்.

உடல்நலக் குறைவால் தடை... இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க வேண்டிய படம் ‘ராணா'. அந்த படம் எடுக்கும்போது எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் படத்தில் நடிக்ககூடாது. ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

ராணா ரிஸ்கான படம்... ‘ராணா' படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்தது. சண்டை காட்சிகள் உண்டு. ஆனால் டாக்டர்கள் சண்டை காட்சியில் நடிக்க கூடாது. எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்ககூடாது என்று கூறியதால் அந்த படம் நிறுத்தப்பட்டது.

மகளுக்காக சம்மதம்... இந்த நேரத்தில்தான் லட்சுமி கணபதி பிக்சர்ஸ் சுப்பிரமணியம் என்னை தேடி வந்து கோச்சடையான் படம் பற்றி கூறினார். எனது மகள் சவுந்தர்யா டைரக்டர் செய்கிறாள் என்பதால் இதனை ஒத்துக்கொண்டேன்.

ஏமாற்றம்... கடந்த இரண்டரை வருடமாக கஷ்டப்பட்டு சவுந்தர்யா இந்த படத்தை எடுத்து உள்ளார். இந்த படத்தை 2 டியில் பார்த்தேன். 10 நிமிடம் பார்த்தபோது பெரும் ஏமாற்றம் அடைந்தேன்.


உயிரோடு இருக்கும் எனக்கு அனிமேஷனா... உயிரோடு இல்லாதவர்களை வைத்துதான் அனிமேஷன் படம் எடுப்பார்கள். ஆனால் நான் உயிருடன் இருக்கும்போதே என்னை வைத்து அனிமேஷன் முறையில் படம் எடுத்ததை பார்க்கும்போது எனக்கே ஒருமாதிரியாக இருந்தது.

கதாபாத்திரத்தோடு ஒன்றி விட்டேன்... ஆனால் 10 நிமிடத்துக்கு பிறகு கதையின் போக்கு என்னை அதில் ஒன்றிப்போகச் செய்து விட்டது. அனிமேஷன் என்று தெரியாமல் கதாபாத்திரத்துடன் ஒன்றி படத்தை ரசித்தேன்.

கமல் நடிக்க வேண்டிய படம்.... அதேபோல், ‘கோச்சடையான்' கமலஹாசன் நடிக்க வேண்டிய படம். கமல் என்னைவிட சிறந்த நடிகர். சினிமா டெக்னாலஜி பற்றி நன்கு தெரிந்தவர்.

கடவுள் தந்த பரிசு... ரோபோ, விக்கிரமசிம்மா போன்ற படங்களை அவர் செய்ய வேண்டிய படங்கள். டெக்னாலஜி தெரியாத நான் நடித்தது கடவுள் தந்த பரிசாக கருதுகிறேன்' என இவ்வாறு அவர் கூறினார்.