சென்னைக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி:தொடரும் மும்பை சோகம்

ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி, மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே டில்லி, ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
                                             Brendon McCullum, cricket

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த தொடரின் 13வது லீக் போட்டியில், சென்னை அணி, ‘நடப்பு சாம்பியன்’ மும்பையை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

ரோகித் அரைசதம்:

சென்னை அணியின் துடிப்பான பந்துவீச்சில் மும்பை அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. மைக்கேல் ஹசி (1), ஆதித்யா தாரே (23) நிலைக்கவில்லை. பின் இணைந்த கோரி ஆண்டர்சன், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த போது ஆண்டர்சன் (39) ‘ரன்–அவுட்’ ஆனார். ஹில்பெனாஸ், ரெய்னா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ரோகித், ஐ.பி.எல்., அரங்கில் 19வது அரைசதம் அடித்தார். இவர், 41 பந்தில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். மோகித் சர்மா வீசிய 19வது ஓவரில் அம்பதி ராயுடு (1), போலார்டு (12), ஹர்பஜன் சிங் (0) அவுட்டானார்கள். ஹில்பெனாஸ் வீசிய கடைசி ஓவரில் ஜாகிர் கான் ஒரு சிக்சர் அடித்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. கவுதம் (7), ஜாகிர் கான் (7) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் மோகித் சர்மா 4, ஹில்பெனாஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

நல்ல துவக்கம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. இவர்கள் மும்பை பந்துவீச்சை சிதறடித்தனர். ஓஜா வீசிய 3வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசிய ஸ்மித், ஜாகிர் கானின் 4வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரண்டன் மெக்கலம், ஜாகிர் (2), கோரி ஆண்டர்சன் (3) பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த போது, ஓஜா ‘சுழலில்’ ஸ்மித் (29) அவுட்டானார்.

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (1), ஹர்பஜனிடம் சரணடைந்தார். தொடர்ந்து அசத்திய மெக்கலம், ஐ.பி.எல்., அரங்கில் தனது 7வது அரைசதம் அடித்தார். பின் மெக்கலம், டுபிளசி ஜோடி இணைந்து போராடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த போது, ஹர்பஜன் ‘சுழலில்’ டுபிளசி (20) வெளியேறினார்.

சென்னை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரண்டன் மெக்கலம் (71), கேப்டன் தோனி (14) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் ஹர்பஜன் 2, பிரக்யான் ஓஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஏற்கனவே கோல்கட்டா, பெங்களூரு அணிகளிடம் வீழ்ந்த மும்பை அணி, தொடர்ந்து மூன்றாவது தோல்வி பெற்றது.

ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் மோகித் சர்மா வென்றார்.

தோனி ‘100’

நேற்று, சென்னை அணி கேப்டன் தோனி, மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தங்களது 100வது ஐ.பி.எல்., போட்டியில் விளையாடினர். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். முதலிடத்தில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா (103 போட்டி) உள்ளார்.

* இது, கேப்டனாக தோனியின் 100வது போட்டி. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் 100 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவரை அடுத்து கில்கிறிஸ்ட் (74), காம்பிர் (66) உள்ளனர்