கோவையில் காதல் கணவரை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு மகளை கடத்திய பெற்றோர்

கோவையில் காதல் கணவரை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு மகளை கடத்திய பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
                                     

காதலித்தனர்

கோவை கணபதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் சுதாகர் (வயது25). இவர் அத்திப்பாளையம் பிரிவில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருகிறார். இவரும் கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்த மஞ்சு பட்டேல் (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இவர் வடமாநில பெண் ஆவார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இந்த நிலையில் இருவரது காதலுக்கும் சுதாகர் வீட்டில் பச்சைக்கொடி காட்டினர். ஆனால் மஞ்சு பட்டேலின் வீட்டில், அந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரது பெற்றோர் சுதாகரை மறந்து விடும்படி எச்சரித்தனர். இதனால் மனம் உடைந்த மஞ்சு பட்டேல், தனது வீட்டில் நடந்தவற்றை சுதாகரிடம் கூறினார். பின்னர் இருவரும் ஒரு முடிவுக்கு வந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

ஆத்திரம்

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பேரூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் கணபதியில் உள்ள சுதாகரின் அண்ணன் ராஜன் என்பவரது வீட்டில் தஞ்சம் புகுந்தனர். இதைத் தொடர்ந்து அவரது அண்ணனும், அவரது பெற்றோரும் சுதாகரின் திருமணத்தை அங்கீகரித்தனர். இந்த நிலையில் மகளை காணாமல் பதறிப்போன மஞ்சு பட்டேலின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். பின்னர் அவரும், சுதாகரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்து ஆத்திரம் அடைந்தனர். எப்படியாவது சுதாகரிடம் இருந்து மஞ்சுவை பிரித்து விட வேண்டும் என்று, சுதாகர் தங்கியிருந்த அவரது அண்ணன் வீட்டுக்கு சென்றனர்.

வஞ்சக திட்டம்

அங்கிருந்த மஞ்சுவிடம் சுதாகரை மறந்து விட்டு தங்களிடம் வந்து விடு என்று வற்புறுத்தினர். ஆனால் மஞ்சு அதை ஏற்கவில்லை. இதனால் அவரது பெற்றோர் கவலையுடன் வீடு திரும்பினர். இருந்தாலும் அவர்கள், தங்களது மகளை எப்படியாவது சுதாகரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று புது திட்டம் வகுத்தனர்.

அந்த வஞ்சக திட்டத்தின் அடிப்படையில் மீண்டும் சுதாகர் வசிக்கும் அவரது அண்ணன் வீட்டுக்கு சென்று, சுதாகருக்கும், மஞ்சுவுக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்து விருந்து வைக்கிறோம்.

ஆகவே அவர்களை எங்களுடன் அனுப்பி வையுங்கள். மகளுக்காக வாழும் ஆசையை நிறைவேற்ற உதவி செய்யுங்கள் என்று கண் கலங்குவது போன்று நடித்தனர். இதை நம்பிய சுதாகர், தனது மனைவி மஞ்சு மற்றும் அண்ணன் ராஜன் ஆகியோருடன் மாமனார் வீட்டுக்கு சென்றார்.

வெளியேவர முடியவில்லை

அங்கு வந்த அவர்களிடம் முறைப்படியான திருமணத்துக்காக மஞ்சுவுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, அவரை ஒரு அறையிலும், சுதாகரையும், அவரது அண்ணன் ராஜனையும் வேறு ஒரு அறையிலும் தங்க வைத்தனர். அவர்கள் இருவரும் தங்கிய அறைக்கதவினை வெளிப்புறமாக பூட்டி விட்டு, மகள் மஞ்சுவை கடத்தி செல்ல முயன்றனர். அப்போது மஞ்சு கூச்சல் போட்டார். இதனை கேட்ட சுதாகரும், ராஜனும் தங்களது அறையில் இருந்து வெளியே வந்து அதனை தடுக்க முயன்றனர். ஆனால் அந்த கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

போலீசில் புகார்

இதைத் தொடர்ந்து அவர்கள் தங்களின் செல்போன் மூலம் நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து அந்த அறைக்கதவை திறந்தனர். அதன் பின்னர் சுதாகரும், ராஜனும் அங்கிருந்து மஞ்சுவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே ஆர்.எஸ்.புரம்.போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு பட்டேலை தேடி வருகின்றனர்.