வாக்களிக்காதவர்களின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷன் வெளியிடுமா?

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது தேர்தல் நடைமுறை. இது ஒரு ஜனநாயக கடமை மற்றும் உரிமை. லோக்சபா தேர்தலில், இதுவரை 6 கட்ட ஓட்டுப்பதிவு, முடிந்துள்ளது. இதில் பதிவான ஓட்டு சதவீதம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.                                       

உயர்தர வகுப்பினர் அதிகமாக வசிக்கும் மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் பதிவான ஓட்டுப்பதிவு, தர்மபுரி (81.14), கரூர் (80.47), உடுப்பி சிக்மகலுார் (74.46), போன்ற பின்தங்கிய பகுதிகளை விட குறைவாக உள்ளது. மெட்ரோ நகரங்களின் சராசரி ஓட்டுப்பதிவு 60 சதவீதத்தை கூட தொடவில்லை என்பது ஆச்சர்யம் மற்றும் வெட்கப்பட வேண்டிய செயல். அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள பின்தங்கிய பகுதி மக்கள் ஜனநாயக கடமையை உணர்ந்து செயல்படுத்துகின்றனர்.

ஆனால் பொருளாதரத்தில் தன்னிறைவு; படிப்பறிவு; அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் முன்னேற்றம் என அனைத்து விதத்திலும் மெட்ரோ நகர மகள் முன்னேற்றமடைந்துள்ளனர். இவர்கள் அரசியல் பேசுகின்றனர்; ஆட்சியாளர்களை விமர்சிக்கின்றனர்; ஊழல் குறித்து பேசுகின்றனர்; அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுக்கொள்கின்றனர். ரேஷன் கார்டுகளை வைத்துள்ளனர்.

ஆனால் ஓட்டுப்போட வரிசையில் நிற்க மட்டும் வெட்கப்படுகின்றனர். அதுவும் ஓட்டுப்பதிவு அன்று, ஊதியத்துடன் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த விடுமுறையை தங்களது, குடும்பம் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா சென்று பொழுதை போக்குகின்றனர். ஆனால் மற்ற பகுதி மக்கள், ஜனநாயக கடமையான ஓட்டளிப்பதற்காக, 500 கி.மீ., துாரம் பயணம் செய்து, சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கின்றனர்.

தேர்தலில் ஓட்டளிக்காத இந்த மெட்ரோ நகர வாக்காளர்களின் சலுகைகளை (மானிய விலை சிலிண்டர், ரேஷன் கார்டு, வங்கி கடன் வசதி) ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர்களின் பெயர்களை தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம், இணையதளத்தில் வெளியிட வேண்டும்.