கள்ளக்காதலால் மனைவி தற்கொலை கணவன், கள்ளக்காதலிக்கு ஜெயில்

கள்ளக்காதலால் மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவன், கள்ளக்காதலிக்கு சிறைத்தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
                                            


கள்ளக்காதல்


சென்னை ஆவடி 2-வது தெரு, காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்புசிக்கந்தர் (வயது 45). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சகாய இருதயமேரி (29) என்பவரை 31-5-1996 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெனிவர் பியூலா (5) என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்புசிக்கந்தருக்கும் ஆவடியை சேர்ந்த புனிதப்பிரியா (35) என்பவருக்கும், இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை சகாயஇருதயமேரி கண்டித்தார். கடந்த 1-7-2013 அன்று மீண்டும் கணவன், மனைவிக்கிடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட அப்புசிக்கந்தர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.


தற்கொலை


மனவேதனையடைந்த சகாய இருதயமேரி மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தந்தை மரிய ஜோசப் (51) ஆவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்புசிக்கந்தர், புனிதபிரியா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்த வழக்கு நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.


8 ஆண்டு சிறை


வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அப்புசிக்கந்தருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். புனித பிரியாவிற்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக பி.எஸ்.ஆர். சவுந்தர்ராஜன் வாதாடினார்.