இறுதிப்போட்டியில் இந்தியா நுழையுமா? நாளை பலப்பரீட்சை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு நாளைய அரை இறுதிப் போட்டியில் கடும் சவால் காத்திருக்கிறது.வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ‘சூப்பர் 10’ சுற்றில் தான் மோதிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை எளிதில் வென்று இருந்தது. தோல்வி எதையும் சந்திக்காமல் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

                                     இறுதிப்போட்டியில் இந்தியா நுழையுமா? நாளை பலப்பரீட்சை

நாளை நடைபெறும் அரைஇறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 2007 உலக கோப்பையை வென்ற டோனி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்க அணி வலுவானது என்பதால் அந்த அணியை வீழ்த்த இந்தியா கடுமையாக போராட வேண்டும்.

தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் சுழற்பந்தில் சற்று திணற கூடியவர்கள். இதனால் அமித் மிஸ்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திவிடலாம்.

டிவில்லியர்ஸ், டுமினி, அம்லா, குயன்டன் காக் போன்ற அதிரடி பேட்ஸ் மேன்கள் இந்திய பவுலர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.

யுவராஜ்சிங்கின் காயம் கவலை ஏற்படுத்தி இருக்கிறது. நல்ல நிலையில் இருக்கும் அவர் நாளை உடல் தகுதி பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீராட்கோலி, ரெய்னா, கேப்டன் டோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடுவது அவசியமாகிறது.

கடந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட வேகப்பந்து வீரர் முகமது ஷமி நாளை ஆட்டத்தில் இடம் பெறுவாரா என்பது உறுதியில்லை. மொகித்சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேர்த்தியுடன் பந்து வீசியதால் அரை இறுதியில் வாய்ப்பு கிடைக்கலாம். இருவரில் ஒருவரை தேர்வு செய்வதில் டோனிக்கு சிரமம் ஏற்படலாம்.

தென்ஆப்பிரிக்காவிக் பலமே வேகப்பந்து வீச்சுதான். ஸ்டெய்ன் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். அவரது பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையுடன் எதிர் கொண்டால் முன்னேற்றம் காணலாம்.

‘சூப்பர்10’ சுற்றில் தென் ஆப்பிரிக்கா 3 வெற்றியை (நியூசிலாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து) பெற்றது. இலங்கைக்கு எதிராக தோல்வி அடைந்தது. முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா இருக்கிறது.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் வருமாறு:–

இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித்சர்மா, வீராட் கோலி, யுவராஜ்சிங், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, மொகித்சர்மா, ரகானே, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி.

தென்ஆப்பிரிக்கா: டுபெலிசிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, குயின்டன் காக், டிவில்லியர்ஸ், டுமினி, டேவிட் மில்லர், அல்பி மார்கல், இம்ரான் தாகீர், ஸ்டெய்ன், பர்னல், ஹென்ட்ரிக்ஸ், சோட்சோபே, மார்னே மார்கல், ஆரோன் பான்ஜியோ.