அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

5 முனைப்போட்டி

தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அதாவது, அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாகவும், தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டும் தேர்தலை சந்திக்கின்றன. இதேபோல், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து தலா 9 தொகுதிகள் வீதம் 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 875 பேர் களத்தில் உள்ளனர்.

அனல் பறக்கும் பிரசாரம்

தமிழகத்தில் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான கடந்த 9-ந் தேதிக்கு பிறகு, பிரசாரம் சூடுபிடித்தது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், தேசிய கட்சி தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகளும் மும்முரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ஜெயலலிதா

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 37 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்த நிலையில், நேற்று முன்தினம் முதல் சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். இன்று (திங்கட்கிழமை) தென்சென்னை தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்ய உள்ளார்.

இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் சென்னையில் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று அண்ணா நகர் எம்.எம்.டி.ஏ. காலனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார். நாளை வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்ளும் கருணாநிதி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரிக்கிறார்.

அத்வானி, ராகுல் இன்று வருகை

அதேபோல், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். அவரைத் தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டார். கோவையில் நேற்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின் கட்காரி பிரசாரம் செய்தார்.

அவரைத் தொடர்ந்து, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வேலூரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதாவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அவர் பேசுகிறார்.

காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேசுகிறார்.

இதேபோல், பிரதமர் மன்மோகன்சிங் நாளை (செவ்வாய்க்கிழமை) சிவகங்கை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நேற்று வரை பிரதமர் மன்மோகன்சிங்கின் வருகை உறுதி செய்யப்படவில்லை.

நாளை ஓய்கிறது

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு, தேர்தல் தொடர்பான பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது.

மேலும், செல்போன் எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், டிவிட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். போன்ற எலக்ட்ரானிக் பிரசாரங்களுக்கும் நாளை மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி யாராவது தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று தேர்தல் ஆணை யம் எச்சரித்து உள்ளது. இதுதொடர்பான புகார்கள் நிரூபிக் கப்பட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனையும் கிடைக் கும்.

ரூ.199 கோடி

தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு மட்டும் ரூ.199 கோடியை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 24-ந் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவெளியின்றி வாக்காளர்கள் ஓட்டுப்போடலாம். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மாலை 6 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அனைவரும் வாக்களித்த பிறகே அந்த பூத்தில் வாக்குப்பதிவு முடிக் கப்படும்.