ஹீரோ விராத் கோஹ்லி: பைனலில் இந்திய அணி

விராத் கோஹ்லியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை,6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின.
                                                kohli, india, cricket

‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

டுபிளசி ஆறுதல்:

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (6), சுமாரான துவக்கம் கொடுத்தார். ஆம்லா (22), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார்.

பின் இணைந்த டுபிளசி, டுமினி ஜோடி சீரான ரன்குவிப்பை வெளிப்படுத்தியது. டுபிளசி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் 5வது அரைசதம் கடந்தார்.

அஷ்வின் ‘3’:

பின் பந்தை சுழற்றிய அஷ்வின், அபாயகரமான டுபிளசியை (58 ரன்கள், 41 பந்து) போல்டாக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், டிவிலியர்சையும் (10) வெளியேற்றினார். பின் வரிசையில் டுமினி கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. டுமினி (45), மில்லர் (23) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நல்ல துவக்கம்:

சவாலான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ரகானே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. டுமினியின் முதல் ஓவரில் 3 பவுண்டரி உட்பட, 14 ரன்கள் கிடைத்தன. மார்கல் ஓவரில் இரு பவுண்டரி அடித்த ரோகித், ஸ்டைன் பந்தை சிக்சருக்கு விரட்டினார். இவர் 13 பந்தில் 24 ரன்களுக்கு அவுட்டானார்.

பார்னல் பந்தில் சிக்சர் அடித்த ரகானே (32), நிலைக்கவில்லை. அடுத்து கோஹ்லியுடன் யுவராஜ் சிங் சேர்ந்தார். டுமினி பந்தில் கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க, 12.3 வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.

கோஹ்லி அரைசதம்:

மறுமுனையில் இம்ரான் பந்தை சிக்சருக்கு விளாசிய கோஹ்லி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், 7வது அரைசதம் எட்டினார்.

யுவராஜ் சிங் (18) ஏமாற்ற, இந்திய அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டன.

பார்னல் வீசிய போட்டியின் 17வது ஓவரில், வந்த வேகத்தில் சிக்சர் அடித்த ரெய்னா, அடுத்தடுத்து பவுண்டரிகளும் விளாச, 17 ரன்கள் கிடைத்தன.

அடுத்து ஸ்டைன் ஓவரில், கோஹ்லி 2 பவுண்டரிகள் அடிக்க, இந்திய அணியின் வெற்றி எளிதானது. ரெய்னா (21) அவுட்டான போதும், கடைசியில் கோஹ்லி ‘சூப்பர்’ பவுண்டரி அடிக்க, இந்திய அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.

கோஹ்லி (72 ரன்கள், 44 பந்து), தோனி (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது முறை

‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. கடந்த 2007ல் நடந்த முதல் தொடரில் சாம்பியன் ஆன இந்திய அணி, 7 ஆண்டுக்குப் பின், மீண்டும் பைனலுக்குள் நுழைந்தது.

‘சூப்பர்’ தோனி

ஐ.சி.சி., நடத்தும் தொடர்களில் கேப்டன் தோனி தலைமையில், இந்திய அணி 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல், 50 ஓவர் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடர்களில் பைனலுக்கு முன்னேறி, கோப்பை வென்றது. தற்போது, 2014 ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இதிலும் தோனி சாதிப்பார் என நம்பலாம்.

இலங்கையுடன் மோதல்

நாளை நடக்கும் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் பைனலில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கவுள்ளது. இதற்கு முன் இலங்கையுடன் மோதிய 2011 உலக கோப்பை தொடர் பைனலில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது.

யுவராஜ் உற்சாகம்

நேற்று வெற்றிக்கான ரன்னை கோஹ்லி பவுண்டரியாக அடித்து அசத்தியதும், களத்தில் புகுந்த யுவராஜ், கோஹ்லியை அப்படியே மேலே துாக்கி கொண்டாடினார்.

                                      

அரையிறுதி ‘அலர்ஜி’

தென் ஆப்ரிக்க அணி 1998ல் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடரில் மட்டும் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் பின் நடந்த எந்த ஐ.சி.சி., தொடரிலும் அரையிறுதியை தாண்டியது இல்லை.

அதாவது 50 ஓவர் உலக கோப்பை தொடரில் 1992, 1999, 2007, சாம்பியன்ஸ் டிராபியில் 2000, 2002, 2006, 2013 மற்றும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் 2009, 2014 என, 9 முறை அரையிறுதியில் வீழ்ந்துள்ளது.