சென்னை அணிக்கு முதல் வெற்றி டெல்லியை சுருட்டியது

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

                                           

பிராவோ ஆடவில்லை

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு அபுதாபியில் நடந்த 8–வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வெய்ன் பிராவோ மற்றும் நெஹரா, பவான் நெஜி ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ஹில்பனாஸ், மிதுன் மன்ஹாஸ், ஐஸ்வர் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

தினேஷ் கார்த்திக் கேப்டன்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை தினேஷ்கார்த்திக் கவனித்தார். மற்றபடி அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கடந்த ஆட்டத்தை போல் சென்னை அணி நேற்று பேட்டிங்கில் தொடக்கத்தில் அதிரடி காட்டவில்லை, நிதானமான போக்கை கடைப்பிடித்தது. 4–வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சில் டுமினியிடம் எளிதான கேட்ச்சில் இருந்து தப்பிய பிரன்டன் மெக்கல்லம் (9 ரன்கள்) அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

சுரேஷ்ரெய்னா அரை சதம்

அடுத்து களம் கண்ட சுரேஷ்ரெய்னா நிலைத்து நின்று அடித்து ஆடினார். 10 ஓவர்களில் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 65 ரன்னை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் 29 ரன்னில் (28 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் போல்டு ஆனார். எம்.விஜய் வீசிய ஒரு ஓவரில் சுரேஷ்ரெய்னா 3 பவுண்டரி உள்பட 13 ரன்கள் சேர்த்தார். 36 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை எட்டிய சுரேஷ்ரெய்னா 56 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து தங்கள் பங்குக்கு டுபிளிஸ்சிஸ் 24 ரன்னும் (17 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் டோனி 32 ரன்னும் (15 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்), ரவீந்திர ஜடேஜா 7 ரன்னும், அஸ்வின் ஒரு ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

                     

178 ரன்கள் இலக்கு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. மிதுன் மன்ஹாஸ் 13 ரன்னுடனும் (5 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ஹில்பனாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஷபாஸ் நதீம், ஜிம்மி நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சென்னை அணி வெற்றி

டெல்லி டேர்டெவில்ஸ் அணி 15.4 ஓவர்களில் 84 ரன்னில் சுருண்டது. இதனால் சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஜிம்மி நீஷம் 22 ரன்னும், கேப்டன் தினேஷ்கார்த்திக் 21 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினார்கள். காயம் காரணமாக நாதன் கவுல்டர் நிலே பேட்டிங் செய்யவில்லை. சென்னை அணி தரப்பில் ஐஸ்வர் பாண்டே, ரவீந்திரஜடேஜா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், ஹில்பனாஸ், மொகித் ஷர்மா, வெய்ன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சென்னை வீரர் சுரேஷ்ரெய்னா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2–வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் பஞ்சாபிடம் தோற்று இருந்தது. 3–வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது 2–வது தோல்வியாகும்