கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்த பொறியியல் மாணவர் சாவு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் படித்து வந்த பி.டெக். முதலாண்டு மாணவர் கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சரவணபாண்டியன் (18). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். முதலாண்டு படித்து வந்தார். 

சனிக்கிழமை மாலை செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு இரண்டாம் மாடியில் இருந்த சரவணபாண்டியனின் புத்தகம் சன் சைடில் விழுந்துள்ளது.

அதனை எடுத்துவிட்டு மேலே ஏறும் போது சரவணபாண்டியன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் திருமங்கலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது சரவணபாண்டியன் உயிரிழந்தார்.இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.