வெற்றி பாதையில் மங்கல்யான் விண்கலம்

செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக பயணித்து வரும் மங்கல்யான் விண்கலம், செப்டம்பரில் செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்’ என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கை: பிஎஸ்எல்விசி 25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்தாண்டு நவம்பர் 5ம் தேதி செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலம், டிசம்பர் 1ம் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி திசை திருப்பப்பட்டது.

                                        


 சூரியனை மையப்படுத்திய வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், கடந்த பல மாதங்களாக செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணித்து வருகிறது. இதை இஸ்ரோ 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. இந்த பணியில் நாசாவும் உதவி செய்து வருகிறது. சீரானப்பாதையில் மங்கல்யான் பயணித்து வருவதால் ஏப்ரலில் மேற்கொள்ள வேண்டிய திசை திருப்பும் பணிக்கு அவசியம் ஏற்படவில்லை.

அவசியம் ஏற்பட்டால் ஜூனில் திசை திருப்பும் பணி மேற்கொள்ளப்படும். இந்த விண்கலத்தில் உள்ள 5 அறிவியல் ஆராய்ச்சி கருவிகளும் பாதுகாப்பாகவும், நல்ல நிலையிலும் இருக்கின்றன. இந்திய நேரப்படி நேற்று முன் தினம் பயண பாதையின் பாதி தொலைவை மங்கல்யான் கடந்து சீரான பாதையில் பயணித்து வருகிறது. விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையேயான ரேடியோ அலை தொலைவு ஒரு கோடியே 90 லட்சம் கிமீ. பூமியில் இருந்து விண்கலத்துக்கும் அங்கிருந்து பூமிக்கும் ரேடியோ சமிக்ஞைகளை அனுப்புவதற்கு 4 நிமிடங்கள் 15 விநாடிகள் ஆகின்றன. விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிக தொலையுணர்வு ஆற்றல் கொண்ட கருவிகளை செயல்பட வைக்கும் பணி இப்போது மேற்கொள்ளப்படும். இந்த கருவிகள் உதவியுடன் பூமியில் உள்ள தொடர்பு மையத்திற்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்படும். இந்தாண்டு செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் மங்கல்யான் விண்கலம் நிலை நிறுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.