தடையில்லா மின்சாரம் தமிழக அரசு உத்தரவு

மின் தடை பிரச்னையை சமாளிக்க, விடுமுறை தினமான, நேற்று, மின் வாரிய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து, ஆலோசனை நடத்தினர்.வட சென்னை மற்றும் மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையம்; நீர் மின் நிலையம் ஆகியவற்றில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், 3,000 3,500 மெகா வாட், மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், பல மணி நேரம், மின் தடை செய்யப்படுகிறது.


                                     
லோக்சபா தேர்தல் நேரத்தில், மின் தடை செய்வது, அ.தி.மு.க., தொண்டர்கள் உட்பட, பல தரப்பினரிடமும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மின் வாரிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு, மாதத்தின், இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை. மாதத்தின் பிற சனிக்கிழமைகளில் வேலைக்கு வர வேண்டும்.அதன்படி, கடந்த சனி, ஞாயிறு, திங்கள் என, மூன்று நாட்கள், மின் வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை.ஆனால், மின் வாரிய அதிகாரிகள், சனிக்கிழமையும், நேற்றும், அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, மின் தடை பிரச்னையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேட்டூர் தவிர, அனைத்து மின் நிலையங்களிலும், மீண்டும் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. இதனால், மின் தடை நேரம் குறையும்' என்றார்.அரசு உத்தரவு:


லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஒரு வாரம் மட்டும் உள்ளதால், குடியிருப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, தனியார் மின் நிறுவனங்களிடம் இருந்து, கூடுதல் மின்சாரத்தை, அதிக விலைக்கு வாங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், அரசுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம்.

இதுகுறித்து, மின் துறை வட்டாரங்கள் கூறியதாவது:தனியார் மின் நிறுவனங்களிடம், 1,154 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதி உள்ளது. ஜி.எம்.ஆர்., மதுரை பவர், சம்பல்பட்டி, பிள்ளை பெருமாள் ஆகிய நான்கு நிறுவனங்களிடம், ஒரு யூனிட் மின்சாரம், சராசரியாக, 10.91 ரூபாய் என்ற விலையில், நாள்தோறும், 700 - 750 மெகா வாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதனால், தினமும் 19 கோடி ரூபாய் செலவாகிறது.மின் பிரச்னையை சமாளிக்க, சில தினங்களாக, 1,000 மெகா வாட் அளவிற்கு, மின்சாரம் வாங்கப்படுகிறது. மின் வாரிய அனல் மின் நிலையங்களை விரைவில் புனரமைத்தால், கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.இச் செலவைத் தவிர்க்கலாம்,இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.