மோடி அரசு முன் காத்திருக்கும் 10 சவால்கள்

நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும், தனிப்பெரும்பான்மையுடனும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமரவுள்ளது. புதிய பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மோடியின் முன்பாக அணிவகுத்துள்ள சவால்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
                                        

1. நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது மோடி முன்பாக உள்ள மிக முக்கிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. குறிப்பாக உணவுப்பொருட்களின் விலை உயர்வே கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது எனலாம். நாட்டிலுள்ள நடுத்தர வர்க்கத்தினர் மோடி விலைவாசியை குறைப்பார் என எதிர்பார்க்கின்றனர்.


2. மோடி தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். இதற்கான பணிகளை பிரதமர் அலுவலகம் முடுக்கி விட்டுள்ளது. 


3. நாட்டில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துதல் மோடி முன்பாக உள்ள மிக முக்கிய சவால் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தனது முழு பலத்தையும் பிரயோகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகளை அவர் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


4. முக்கிய துறைகளில் காலியாக உள்ள இடங்களில் அதிகாரிகளை நியமித்தல். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த சில நாட்களில் பல்வேறு நியமன அறிவிப்புகளை வெளியிட்ட போதும், மேலும் பல இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


5. ஒவ்வொரு துறை வாரியாக முக்கிய பணிகள் குறித்த அறிக்கைகளை பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது. இது தொடர்பான பணிகள் துவங்கியுள்ளன.


6. முக்கியத்துறைகளில் பங்கு விலக்கலை துரிதப்படுத்துல். வாஜ்பாய் ஆட்சியின் போது மிக முக்கிய பணியாக இருந்த இந்த செயல்பாடு, பின்னர் மன்மோகன் சிங் ஆட்சியில் மாநில கட்சிகளின் கோரிக்கை காரணமாக பல்வேறு நிலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


7. லோக்பால், ஊழல் எதிர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவது புதிய அரசுக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. குறிப்பாக ராஜ்யசபாவில் போதிய உறுப்பினர்கள் இல்லாத நிலையில், இதற்காக பல்வேறு கட்சிகளை பா.ஜ., நாடவேண்டியிருக்கும்.


8. அதிகாரம் மிக்க அமைச்சர்கள் குழுக்களை அமைத்தல், புதிய அரசு அமைந்தவுடன் அரசின் மிக முக்கிய பணியாக இருக்கும். கடந்த ஆட்சியில் 78 அமைச்சர்கள் குழுவும், 16 அதிகாரம் மிக்க அமைச்சர்கள் குழுவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


9. கவர்னர்களை நியமித்தல். புதிதாக அமையவுள்ள தெலுங்கானா உள்ளிட்ட நாட்டிலுள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கு கவர்னர்களை நியமித்தல்.


10. பிரதமர் தலைமையிலான கமிட்டிகளை அமைத்தல். பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் 21 குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றிற்கான உறுப்பினர்களை நியமித்தல் மோடி அரசின் முக்கிய பணியாக இருக்கும்.