மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம்; 11 தீவிரவாதிகள் கைது

சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.
                                          

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்–21’ என்ற நீர்மூழ்கி ‘ரோபோ’வை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை.

திடீர் திருப்பம்

இந்த நிலையில், மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் மாயமானதில், அமெரிக்காவில் நியூயார்க் 110 மாடி உலக வர்த்தக மைய கட்டிடம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது விமானங்களை மோதி கொடூர தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரு வலுவான ஆதாரம் உள்ளது.

நியூயார்க் கோர்ட்டில் தகவல்

அமெரிக்காவால் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதியும், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனுமான பின்லேடனின் நெருங்கிய உறவினரான சாஜித் பாதத், நியூயார்க் கோர்ட்டில் பின்லேடன் மருமகன் மீது நடந்து வருகிற வழக்கில் வீடியோ மூலமாக சாட்சியம் அளித்தார்.

அந்த சாட்சியத்தில் அவர், ‘‘நான் ஆப்கானிஸ்தானில் மலேசிய புனிதப்போராளிகளை சந்தித்தேன். அவர்களில் ஒருவர் விமானி. அவர்களிடம் ஒரு விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்காக ஒரு ஷூ வெடிகுண்டு கொடுத்தேன். அவர்கள் தங்களது அதிரடி நடவடிக்கையை நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தனர்’’ என கூறினார். மலேசிய விமானம் மாயமானதில் அதன் விமானியான கேப்டன் ஜஹாரி அகமது ஷாவுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என ஏற்கனவே சந்தேகங்கள் எழுந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

11 தீவிரவாதிகள் கைது

இதைத் தொடர்ந்தே மலேசியாவில் உள்ள தீவிரவாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என அமெரிக்கா (‘எப்.பி.ஐ.), இங்கிலாந்து (எம்–16) உளவுத்துறையினர் உள்பட சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மலேசியாவில் கோரிக்கை வைத்தன.

இதையடுத்து 11 தீவிரவாதிகள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும், கெடா மாகாணத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 22 முதல் 55 வயது வரையிலானவர்கள். இவர்களில் மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், ஒரு இளம் விதவையும் அடங்குவார்கள். இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகிற ‘டெய்லி மெயில்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தீவிர விசாரணை

இதுதொடர்பாக மலேசிய சிறப்பு போலீஸ் படையின் தீவிரவாத தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘11 தீவிரவாதிகள் இப்போது கைது செய்யப்பட்டிருப்பது, மலேசிய விமானம் காணாமல் போனதில் தீவிரவாதிகளின் நாசவேலையே காரணம் என்ற யூகத்தை வலுவடையச் செய்துள்ளது. விமானம் பீஜிங் செல்லாமல் திருப்பப்பட்டதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்போது கைது செய்யப்பட்டுள்ள 11 தீவிரவாதிகள் ஒரு புதிய குழுவாக இயங்கி வந்துள்ளனர். இவர்கள் பற்றிய தகவல்களை சர்வதேச புலனாய்வாளர்கள் கேட்டுள்ளனர்’’ என்றார்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் தீவிர விசாரணை நடக்கிறது.