விமானப்படை அதிகாரியை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி 17 வயது கள்ளக்காதலனுடன் கைது

டெல்லியில் விமானப்படை அதிகாரியை கழுத்தை நெரித்து கொன்றதாக அவரது மனைவி, 17 வயது கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
                                                      


கள்ளக்காதல்


இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ரமேஷ் சந்திரா (வயது 40). இவரது மனைவி பெயர் சுதா சந்திரா (28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. தென்மேற்கு டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் சுப்ரதோ பூங்கா என்ற இடத்தில் உள்ள அரசு குடியிருப்பில் இவர்கள் வசித்து வருகிறார்கள்.


சுதா சந்திராவுக்கும், 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.


கழுத்தை நெரித்து கொலை


ரமேஷ் சந்திராவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. கடந்த ஏப்ரல் 10–ந்தேதி டெல்லியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று வீட்டில் இருந்த ரமேஷ் சந்திரா காலையிலேயே குடிக்க ஆரம்பித்து விட்டார். அதிகமாக மது அருந்தியதால் போதை மிகவும் அதிகமாகி விட்டது.


இந்த சமயத்தை பயன்படுத்தி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சுதா சந்திரா, தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்தார். அவன் வந்ததும் இருவரும் சேர்ந்து ரமேஷ் சந்திராவை கழுத்தை நெரித்தனர். இதனால் அவர் மூச்சுத்திணறி சாய்ந்தார்.


அதன்பின்னர் சுதா சந்திரா, சுப்ரதோ பூங்கா பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு ரமேஷ் சந்திராவை கொண்டு சென்று, ‘நெஞ்சு வலிப்பதாக கூறி தனது கணவர் கீழே சாய்ந்து விட்டதாக’ கூறினார். இதைத்தொடர்ந்து, ரமேஷ் சந்திராவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அத்துடன் இதுபற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.


பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலம்


உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரமேஷ் சந்திராவின் சாவில் ஏதோ மர்மம் இருப்பதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், உடலை பிரேத பரிசோதனை செய்யுமாறு டாக்டர்களை கேட்டுக்கொண்டனர்.


கடந்த 4–ந்தேதி பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், ரமேஷ் சந்திரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.


கள்ளக்காதலனுடன் கைது


சுதா சந்திரா மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் துருவித்துருவி விசாரித்தார்கள். அப்போது குட்டு அம்பலமானது. அப்போது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவர் ரமேஷ் சந்திராவை கழுத்தை நெரித்து கொலை செய்ததை சுதா சந்திரா ஒப்புக்கொண்டார்.


இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டு இளஞ்சிறார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.