ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி 145 பயணிகள் படுகாயம்

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் திவா மற்றும் ரத்ன கிரி மாவட்டம் சாவந்த்வாடி இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரெயில் நேற்று காலை வழக்கம் போல திவாவில் இருந்து புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறி சென்றனர். இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
                                             

ராய்காட் மாவட்டம் நாகோதானே மலை அடிவார பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை கடந்து ரெயில் சென்றது. காலை 9 மணி அளவில் நாகோதானே மற்றும் ரோகா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு வளைவில் சென்றபோது ரெயில் திடீரென தடம் புரண்டது.

மரண ஓலம்

ரெயிலில் மொத்தம் உள்ள 20 பெட்டிகளில் என்ஜின் மற்றும் அதனை அடுத்த 4 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன. தடம் புரண்ட பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியபடி கவிழ்ந்து கிடந்தன.

நொடிப்பொழுதில் நடந்த விபத்தில் சிக்கிய பயணிகள் மரண ஓலம் எழுப்பினார்கள். உயிரை காப்பாற்ற கூக்குரலிட்டனர். இதை அறிந்த மற்ற பெட்டிகளில் பயணித்த பயணிகள் பதறியடித்தபடி கீழே இறங்கி வந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொங்கன் ரெயில்வே உயர் அதிகாரிகள், தீயணைப்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் ஆம்புலன்சு வேன்களுடன் மருத்துவ குழுவினரும் விரைந்து வந்தனர். சம்பவத்தை கேள்விபட்டு அக்கம்பக்கத்து கிராம மக்களும் அங்கு திரண்டனர். மீட்பு படையினர் கிராம மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

19 பயணிகள் சாவு

மீட்பு பணியின் போது ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிர் இழந்து கிடந்தனர். மேலும் ஏராளமானோர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அவசர அவசரமாக மீட்கப்பட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆம்புலன்சு வேன்களில் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 19 பயணிகள் பலியானார்கள். அவர்களது உடல்கள் நாகோதானே மற்றும் ரோகா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பிவைக்கப்பட்டன.

145 பேர் காயம்

மேலும் விபத்தில் 145 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். படுகாயம் அடைந்த பலர் மும்பை சயான் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படுகாயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. ரெயில் விபத்து செய்தியை கேட்டு உறவினர்கள் பலர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த தங்களது உறவினர் களை கண்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்த விபத்து பற்றி ரெயில்வே இலாகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 16 பேர் பலியானதாகவும், 69 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசவேலை காரணமா?

பலரின் உயிரை பறித்த இந்த ரெயில் விபத்து மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சேத்தன் பக்ஷி விசாரணை நடத்துவார் என்று ரெயில்வே வாரிய தலைவர் அருனேந்திர குமார் அறிவித்தார். இதைத்தொடர்ந்து சேத்தன் பக்ஷி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நிதி உதவி

இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த மத்திய ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன கார்கே இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் உதவி தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரெயில்கள் ரத்து

இந்த ரெயில் விபத்து எதிரொலியாக 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஹபா-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், பிக்கேனர்- கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதற்கிடையே தடம்புரண்டு கவிழ்ந்த ரெயில் பெட்டிகளை தூக்கி நிலை நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.