வங்காளதேசத்தில் 200 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது

வங்காளதேச தலைநகர் டாக்காவிலிருந்து 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷரியத்பூர் நோக்கி சென்ற படகு இன்று ஆற்றில் கவிழ்ந்தது. எம்.வி.மிராஜ்-4 என்ற அந்த படகு முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் ரசூல்பூர் கிராமம் அருகே மேக்னா ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

                                         
இது குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்தை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருப்பதாக முனிஷ்கஞ்ச் மாவட்டத்தின் உதவி ஆணையர் சைபுல் ஹாசன் பாதல் கூறியுள்ளார். கடற்படையும், கடலோர காவல் படையும் தங்கள் மீட்பு குழுவினை அங்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சம்பவ இடத்திலிருந்து ஒரு குழந்தை உள்பட ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரியான ஒலியுர் ரஹ்மான் கூறியுள்ளார். இச்சம்பவத்தில் மேலும் பலர் இறந்திருக்ககூடும் என அஞ்சப்படுகிறது.