போக்குவரத்து காவல்துறையில் 2000 பணியிடங்கள் காலி

போக்குவரத்து காவல் துறையில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், போக்குவரத்து பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆங்காங்கே விபத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து என மூன்று பிரிவுகள் உள்ளது.                                        


 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் போக்குவரத்து காவலும். தினமும் சாலைகளில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, பராமரிப்பது என தினமும் பொதுமக்கள் தொடர்புள்ள பணிகளை செய்துவருவதில் முக்கிய பங்கு வகிப்பது போக்குவரத்து காவல் துறை. 


சமீபத்தில் காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு காவலர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக எழுந்த புகாரின் பேரில் 2000க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். அப்போதும் போக்குவரத்து காவலராக விருப்பம் தெரிவித்த யாருக்கும் போக்குவரத்து காவல் பிரிவு வழங்காமல் அனைவரும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.


இதனால் போக்குவரத்து காவலுக்கு விருப்பம் தெரிவித்தும் போலீசார் மற்ற காவல்துறையில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பெருகி வரும் வாகன பெருக்கம் மக்கள் பயன்பாடு சென்னை நகர காவல் எல்லை விரிவாக்கம் என போக்குவரத்து காவல் பணி அதிக காவலர்கள் தேவைப்படும் நிலையில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள போக்குவரத்து காவலரின் எண்ணிக்கையே குறைவாக உள்ளதாம். இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பொதுமக்களே. வாகன பெருக்கத்தை கட்டுபடுத்த போதிய காவலர் இல்லாததால் முக்கிய சாலை சந்திப்புகள் நெரிசல் மிக்க சாலைகள், சிக்னல்களில் போக்குவரத்து காவலர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. 

இது பற்றி அதிகாரி ஒருவரை கேட்டபோது ‘ஏற்கனவே 2500 ஆயுதப்படை காவலர்களை எடுத்தபோது போக்குவரத்து காவல் துறைக்கும் ஆட்களை பிரித்து அனுப்பி இருக்க வேண்டும். அல்லது இப்போதாவது அந்த வேலையை செய்யவேண்டும். இல்லாவிட்டால் பயிற்சி முடித்து வரும் ஆயுதப்படை காவலர்களை காலியாக உள்ள போக்குவரத்து காவல் துறைக்கு உடனடியாக நிரப்பவேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னை தீரும்’ என்று தெரிவித்தார்.