தமிழக பாஜவினர் 2 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி

தமிழகத்தில் பாஜ கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் தேமுதிக 14 இடங்களில் போட்டியிட்டது. பாமக, பாஜ தலா 8 இடங்களிலும், மதிமுக 7 இடங்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே கட்சிகள் தலா 1 தொகுதியிலும் போட்டியிட்டன.                                         

இதில் பாஜ சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்ட இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.இந்நிலையில் கடந்த 20ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. தமிழக தலைவர்களை, நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கட்டி தழுவி தனது மகிழ்ச்சியை நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் தேமுதிக, மதிமுக, பாமகவினர் தங்களுக்கு ஏதாவது ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி வழங்கினால் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று பாஜ தலைவர்களை தமிழக தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். மூன்று கட்சிகளுக்கும் எம்பி பதவி வழங்கும் பட்சத்தில் மதிமுகவில் வைகோவுக்கும், தேமுதிகவில் இளைஞர் அணிய செயலாளர் எல்.கே.சுதீஷுக்கும் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


இதே போல தமிழகத்தில் பாஜவை பலப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இடம் அளிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கப்பல் போக்குவரத்து துறை அல்லது ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பாஜ மூத்த தலைவர் இல.கணேசனுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜ மூத்த நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் பாஜ தலைமையில் இடம் பெற்றிருந்த கூட்டணி கட்சி தலைவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு வருகின்றனர். தற்போதைக்கு எந்த மாநிலத்திலும் மாநிலங்களவை பதவி காலியாக இல்லை. பதவிகள் காலியாக ஓராண்டு ஆகும். அதன் பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம். யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது குறித்து 24ம் தேதிக்குள் முடிவு தெரிந்து விடும். அதன் அடிப்படையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் 26ம் தேதி வெளியிடப்பட்டு அவர்கள் பதவி ஏற்பார்கள் என்றனர்.