மூன்று தொகுதிகளில் தோல்வி எதிரொலி 3 அமைச்சர்கள் நீக்கம்

தேர்தல் தோல்வி காரணமாக அமைச்சர்கள் பச்சைமால், தாமோதரன், ரமணா ஆகிய 3 அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும், கே.பி.முனுசாமி உட்பட சில அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டது. புதிதாக 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு 2 மாவட்டச் செயலாளர்கள், புதுவை மாநில செயலாளரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
                                      

தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி ஆகிய 2 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் தோல்வி அடைந்தார்.இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பச்சைமால், அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரோடு சேர்ந்து திருவள்ளூரைச் சேர்ந்த அமைச்சர் ரமணா, கோவையைச் சேர்ந்த அமைச்சர் தாமோதரன் ஆகியோரையும் முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கியுள்ளார்.

நீக்கப்பட்ட அமைச்சர்களுக்குப் பதில் அக்ரி கிருஷ் ணமூர்த்தி, எஸ்.பி.வேலு மணி, எஸ்.கோகுல இந்திரா ஆகிய 3 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கே.பி.முனுசாமி உள்ளிட்ட 3 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்ப டுவது இது 14வது முறை யாகும்.


இதுகுறித்து தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எஸ்.தாமோதரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் நீக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம் தொகுதி), எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர் தொகுதி), எஸ்.கோகுல இந்திரா (அண்ணாநகர் தொகுதி) ஆகிய 3 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்மைத் துறையும், எஸ்.பி.வேலு மணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறையும், கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமிக்கு, தொழிலாளர் நலத்துறையையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமாருக்கு வருவாய்த்துறையையும், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையையும் கவனிப்பார்கள். 


முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைபடி இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் மூன்று பேரும் இன்று மாலை 4.40 மணிக்கு அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மே 16ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதிமுக ஆட்சி பதவியேற்று 3 ஆண்டுகளில் ஆண்டுகளில் 14வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, ஜெயலலிதா நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கை:கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.சிவசெல்வரா ஜன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் டி.ஜாண்தங்கம் ஆகியோர் இன்று முதல், அவர்கள் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு இடங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படும் வரை, எம்ஜிஆர் மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் அந்த பணிகளை கூடுதலாக கவனிப்பார். 

அதேபோன்று, தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.பி.அன்பழகன், இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். தர்மபுரி மாவட்ட செயலாளர் நியமிக்கப்படும் வரை, உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் அந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.அன்பழகன் எம்எல்ஏ, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்எல்ஏ ஆகியோர் இன்று முதல் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
                                       

 புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் பி.புருஷோத்தமன், புதுச்சேரி மாநில அதிமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் பி.வி.ரமணாவும் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும்வரை அமைச்சர் மாதவரம் மூர்த்தி திருவள்ளூர் மாவட்ட அதிமுக பணிகளை கூடுதலாக மேற்கொள்வார்.இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.தேர்தலுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டு, தமிழ்மகன் உசேன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின் சிவசெல்வராஜன், ஜாண் தங்கம் ஆகியோர் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஜாண் தங்கம் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். கன்னியாகுமரியில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் 2 மாவட்டச் செயலாளர்களின் பதவியும், அமைச்சர் பச்சைமாலின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட 3 பேரும், ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.