சென்னைக்கு 5வது வெற்றி: ஜடேஜா ‘சுழல்’ ஜாலம்: கோல்கட்டா ஏமாற்றம்

ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி, கோல்கட்டா அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது. ‘சுழல்’ ஜாலம் காட்டிய ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார்.
                                            jadeja, ipl

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான இரண்டாம் கட்டப் போட்டிகள் இந்தியாவில் துவங்கியது. ராஞ்சியில் நேற்று நடந்த தொடரின் 21வது போட்டியில், சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின.

மழை குறுக்கீடு:

மழை காரணமாக போட்டி துவங்குவதில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமானது. பின் தலா 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சாகிப் துல்லியம்:

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி துவக்கம் கொடுத்தது. சாகிப் அல் ஹசன் வீசிய 3வது ஓவரில் சிக்சர் அடித்த டுவைன் ஸ்மித் (16), அதே ஓவரில் அவுட்டானார். பின் இணைந்த மெக்கலம், சுரேஷ் ரெய்னா ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. சாகிப், சுனில் நரைன் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த மெக்கலம், வினய் குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரெய்னா, பியுஸ் சாவ்லா வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த போது, சாகிப் ‘சுழலில்’ ரெய்னா (31) சிக்கினார்.

மெக்கலம் அரைசதம்:

தொடர்ந்து அசத்திய மெக்கலம், வினய் குமார் வீசிய 9வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். காலிஸ் பந்தில் சிக்சர் அடித்த மெக்கலம், ஐ.பி.எல்., அரங்கில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 40 பந்தில் 56 ரன்கள் (2 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த போது ரசல் ‘வேகத்தில்’ வெளியேறினார். கடைசி நேரத்தில் இணைந்த கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. தோனி (22), ஜடேஜா (17) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் சாகிப் 2, ரசல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

‘ஹாட்ரிக்’ நழுவல்:

சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு கேப்டன் கவுதம் காம்பிர் (6) ‘ரன்–அவுட்டாகி’ ஏமாற்றினார். அடுத்து வந்த காலிஸ் (4), அஷ்வின் பந்தில் அவுட்டானார். ஆட்டத்தின் 6வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா இரட்டை ‘அடி’ கொடுத்தார். முதல் பந்தில் மணிஷ் பாண்டேவை (1) அவுட்டாக்கிய ஜடேஜா, இரண்டாவது பந்தில் சாகிப் அல் ஹசனை (0)

வெளியேற்றினார். மூன்றாவது பந்தை ராபின் உத்தப்பா தடுத்தாட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

உத்தப்பா ஆறுதல்:

‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (8) நிலைக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மனம் தளராமல் போராடிய மற்றொரு துவக்க வீரர் உத்தப்பா, மோகித் வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இவர், 38 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் சரணடைந்தார். அடுத்து வந்த ரசல் (1), மோகித் சர்மாவிடம் சரணடைந்தார். அதிரடியாக ஆடிய யூசுப் பதான், ஹில்பெனாஸ் வீசிய 16வது ஒவரில் மூன்று சிக்சர் விளாசினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டன. மோகித் சர்மா வீசிய 17வது ஓவரில் பியுஸ் சாவ்லா (1), யூசுப் பதான் (41) அடுத்தடுத்து அவுட்டானார்கள். கடைசி பந்தை சுனில் நரைன் தடுத்தாட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. இந்த ஓவரில் மொத்தம் 4 ரன்கள் மட்டும் கிடைத்தது. கோல்கட்டா அணி 17 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சுனில் நரைன் (1), வினய் குமார் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

சென்னை சார்பில் ஜடேஜா 4, மோகித் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருதை ரவிந்திர ஜடேஜா வென்றார்.

மூன்று பேர்...மூன்று அரைசதம்

கோல்கட்டாவுக்கு எதிராக அபாரமாக ஆடிய சென்னை அணியின் பிரண்டன் மெக்கலம் (67, 71*, 56), இத்தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை சகவீரர் டுவைன் ஸ்மித் (66, 50, 66), பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் (95, 89, 95) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் தலா 3 அரைசதம் அடித்துள்ளனர்.

அதிக விக்கெட்

வேகப்பந்துவீச்சில் அசத்திய சென்னை அணியின் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இத்தொடரில் அதிக விக்கெட் (6 போட்டி, 11 விக்கெட்) வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் சிறந்த பவுலருக்கான ‘பர்பிள்’ நிற தொப்பியை தன்வசப்படுத்தினார். இவரை அடுத்து மற்றொரு சென்னை அணி வீரர் ரவிந்திர ஜடேஜா (6 போட்டியில் 10 விக்கெட்) 2வது இடத்தில் உள்ளார்.