பெண் நிருபருடனான தொடர்பை ஒப்புக்கொண்டார் திக்விஜய் சிங்

பெண் நிருபர் அம்ருதா ராயுடனான தொடர்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங் ஒப்புக் கொண்டுள்ளார்.பெண் நிருபருடன் அவர் நெருக்கமாக இருப்பதைப் போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் செவ்வாய்க்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, புதன்கிழமை இந்த அறிவிப்பை திக்விஜய் சிங் வெளியிட்டுள்ளார்.
                                    

அரசு தொலைக்காட்சியில் தில்லி பெண் நிருபராக பணியாற்றி வரும் சுமார் 40 வயதுள்ள அம்ருதா ராயுடன், 67 வயதான திக்விஜய் சிங் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் புதன்கிழமை தொடர்ந்து ஒளிபரப்பாகின.

இதையடுத்து டுவிட்டர் இணையதளத்தில் திக்விஜய் சிங்கும், அம்ருதா ராயும் புதன்கிழமை தங்கள் பதிவுகளை செய்துள்ளனர்.

திக்விஜய் சிங் செய்துள்ள பதிவில், "அம்ருதா ராயுடனான எனது தொடர்பை ஒப்புக் கொள்வதில் எந்தவித தயக்கமும் இல்லை. அம்ருதா ராயும் அவரது கணவரும் விவாகரத்து கேட்டு பரஸ்பரம் மனு தாக்கல் செய்துள்ளனர். விவாகரத்து முடிவடைந்தவுடன் நாங்கள் இருவரும் சேர்வது குறித்து முடிவெடுப்போம். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது கண்டனத்துக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.

இதைபோல் அம்ருதா ராய் செய்துள்ள பதிவில், "எனது கணவரை விட்டுப் பிரிந்துள்ள நான் விவாகரத்துக்கு முறையிட்டுள்ளேன். விவாகரத்தான பிறகு திக்விஜய் சிங்குடன் திருமணம் செய்து கொள்வேன். எனது மின்னஞ்சலில் ஊடுருவி யாரோ புகைப்படங்களை திருடியுள்ளனர். இது சட்ட விரோத செயலாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

திக்விஜய் சிங்கின் மனைவி ஆஷா, உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

பாஜக, ஆம் ஆத்மி கட்சி கண்டனம்: இதனிடையே, திக்விஜய் சிங்கின் இந்த நடவடிக்கைக்கு பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன. "இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் நெறிமுறைகளின் அடிப்படையிலும் காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்ய வேண்டும்' என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மோடிக்கு எதிராக குரல் எழுப்பியவர்: குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் திருமண விவகாரம் குறித்து திக்விஜய் சிங் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.

இதையடுத்து வதோதரா தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் திருமணமானவர் என மோடி முதல் முறையாக வெளியிட்டபோது, இதுவரை அதனை ஏன் தெரிவிக்கவில்லை என திக்விஜய் சிங் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.