காதலிக்காக மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்

திருவட்டார் அருகே உள்ள புத்தன்கடையை சேர்ந்தவர் கிளீட்டஸ்(வயது 40).
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இவர் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த போது இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது.                                              காதலிக்காக மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்

இதுகுறித்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவட்டார் ஆண்டான்பொற்றையை சேர்ந்த ஜெனிஷ்(20), ரெபின் (20) என்பதும், இவர்கள் கிளீட்டஸ் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் திருவட்டார் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் இருவரையும் கைது செய்தனர். போலீசாரிடம் ஜெனிஷ் கூறியதாவது:– நானும், ரெனிபும் தனியார் வேன்களில் கிளீனர்களாக பணி புரிந்த போது நண்பர்களானோம். நான் குலசேகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் நர்ஸ் ஒருவரை காதலிக்கிறேன். அவ்வப்போது காதலியை பார்ப்பதற்காக நண்பர் ரெபினுடன் குலசேகரம் செல்வேன். சம்பவத்தன்று ராஜாவூர் கோவில் விழாவுக்கு சென்றிருந்த எனது காதலியை பார்க்க செல்வற்கு மோட்டார் சைக்கிள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே கிளீட்டசின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.