நடிகர் கொன்று புதைப்பு: நடிகை–கள்ளக்காதலனின் உறவினர்களிடம் விசாரணை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை சேர்ந்த துணை நடிகரான ரெனால்டு பீட்டர் பிரின்சோவை பெங்களூரை சேர்ந்த நடிகை சுருதி சந்திரலேகா மற்றும் நடிகர் பீட்டரின் பழைய நண்பர்கள் கொலை செய்து அவரது உடலை புதைத்தனர்.
                                     நடிகர் கொன்று புதைப்பு: நடிகை–கள்ளக்காதலனின் உறவினர்களிடம் விசாரணை

இந்த வழக்கில் பாளையை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான நடிகை சுருதி சந்திரலேகா அவரது கள்ளக்காதலன் உமா சந்திரன் ஆகியோரை பிடிக்க இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகை சுருதி சந்திரலேகாவும் அவரது கள்ளக்காதலனும் பெங்களூருக்கு தப்பி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் உமா சந்திரனின் மனைவி நெல்லை சந்திப்பில் குடியிருந்து வருகிறார். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் உமா சந்திரனின் மனைவி சமீபகாலமாக யார்? யாரிடம் செல்போன் மூலம் பேசியுள்ளார் என்பதையும் தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதைப்போல நெல்லையில் உள்ள உமாசந்திரனின் உறவினர்களிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் உமா சந்திரனின் நண்பரான பாளை கே.டி.சி.நகரை சேர்ந்த நிர்மல் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். நிர்மலின் தந்தை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பல கோணங்களில் விசாரணை நடந்து வருவதால் விரைவில் நடிகை சுருதி சந்திரலேகா மற்றும் அவரது கள்ளக்காதலனான உமா சந்திரன் ஆகியோர் பிடிபடுவார்கள் என தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.