பதவியை துறக்க தயாராகும் கவர்னர்கள்

நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்கவிருக்கிறார். இதனையடுத்து காங்., சார்பில் அமர்த்தப்பட்ட பல்வேறு மாநில கவர்னர்கள் தாங்களாகவே பதவியில் இருந்து விலக முன்வருவார்கள் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

                                            
நாடு முழுவதும் பெருவாரியான வெற்றியை பெற்று தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கட்டிலில் அமர இருக்கிறார் மோடி. கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை. கடந்த காங்., ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த பலருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டது. மோடி பொறுப்பேற்றால் அவரது தலைமையின்கீழ் பணியாற்ற காங்., கவர்னர்கள் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

பொதுவாக புதிய ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் புதிய பிரதமர் நம்பிக்கைக்குரியவர்களை கவர்னர் பதவியில் நியமிப்பது, பழைய கவர்னர்களை மாற்றுவது என நிர்வாகத்தை பலப்படுத்துவர். இவ்வாறு உத்தரவுகள் வரும் முன்னதாக தாமே பதவி விலகிட கர்நாடகா(பரத்வாஜ்) , பஞ்சாப் (சிவராஜ்பாட்டீல் ) , மகாராஷ்ட்டிரா( சங்கரநாராயணன்) , உள்பட 4 மாநில கவர்னர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய காங்., தலைவர் சோனியாவிடம் அனுமதி கேட்டுள்ளனர் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.