சென்னை அணிக்கு ‘அடி’:கோல்கட்டா கலக்கல் வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சொதப்பிய சென்னை அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ரெய்னாவின் அரைசதம் வீணானது. கோல்கட்டா அணி தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது.                                         Chennai, Kolkata, IPL, Cricket

ஏழாவது ஐ.பி.எல்., தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 

சென்னை அணியில் டேவிட் ஹசி, பத்ரீ நீக்கப்பட்டு, ஹில்பெனாஸ், டுபிளசி மீண்டும் சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் மார்னே மார்கலுக்குப் பதில், கம்மின்ஸ் இடம் பெற்றார்.

ஸ்மித் ‘அவுட்’:

சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம், ஸ்மித் ஜோடி இம்முறை சொதப்பல் துவக்கம் கொடுத்தது. சாகிப் அல் ஹசனின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ஸ்மித் (5), கம்மின்ஸ் வேகத்தில் போல்டானார்.

இவரது இரண்டாவது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் மெக்கலம். சுனில் நரைன் பந்தில் சிக்சர் அடித்தார் ரெய்னா. இதன் பின் இந்த ஜோடி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால், முதல் 10 ஓவரில் சென்னை அணி, ஒரு விக்கெட்டுக்கு 59 ரன்கள் மட்டும் எடுத்தது. பின் மெக்கலம், 28 ரன்னுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார்.

ரெய்னா அரைசதம்:

மறுமுனையில் சாவ்லா பந்தை ரெய்னா சிக்சருக்கு விரட்டிய போதும், அணியின் ரன் வேகம் அதிகரிக்கவே இல்லை. சாவ்லா வீசிய 14வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ரெய்னா, அரைசதத்தை எட்டினார்.

டுபிளசி (23), சாவ்லாவின் ‘சூப்பர் த்ரோவில்’ ரன் அவுட்டானார். சிக்சருக்கு ஆசைப்பட்ட ரெய்னா, 65 ரன்னுக்கு (52 பந்து) அவுட்டாகினார். சென்னை அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்தது. தோனி (21), ரவிந்திர ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரு கண்டம்:

எளிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு காம்பிர் (21) ஏமாற்றினார். இரு முறை (6, 24 ரன்னில்) கண்டம் தப்பிய உத்தப்பா, மோகித் சர்மா மற்றும் ஈஷ்வர் பாண்டே ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசினார். இவர் 39 பந்தில் 67 ரன்கள் எடுத்த பின்பு தான் அவுட்டானார்.

அடுத்து வந்த சாகிப் அல் ஹசன், தன்பங்கிற்கு ஹில்பெனாஸ் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என, 17 ரன்கள் அடிக்க, கோல்கட்டா அணியின் வெற்றி எளிதானது. 

கடைசியில் சாகிப் ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 18 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 156 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாகிப் அல் ஹசன் (46 ரன்கள், 21 பந்து), மணிஷ் பாண்டே (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

‘பிளே– ஆப்’ உறுதி

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் 18 புள்ளிகள் பெற்ற பஞ்சாப், முதல் அணியாக ‘பிளே– ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதுவரை 12 போட்டிகளில் 16 புள்ளி (8 வெற்றி) பெற்ற சென்னை அணியும், ‘பிளே– ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள், அடுத்த இரு போட்டிகளில் வென்றால், 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.

ஐதராபாத், பெங்களூரு, மும்பை அணிகளுக்கு ‘பிளே–ஆப்’ வாய்ப்பு மிகவும் கடினம்.