யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் நிலையில், பா.ஜ., தலைவர்களோ புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் இடம்பெற போகிறவர்கள் யார் என்ற பட்டியலையும், அவர்களுக்கும் ஒதுக்கப்படும் துறைகளையும் முடிவு செய்யும் ஆலோசனையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும், இம்முறை அத்வானிக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படமாட்டாது என்றும், சபாநாயகர், லோக்சபா கட்சி தலைவர் அல்லது தே.ஜ., கூட்டணி தலைவர் ஆகிய பொறுப்புக்களில் ஒன்று அவருக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

                                                

தலைவர்கள் ஆலோசனை :


தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி பா.ஜ., கூட்டணி 280 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது. கருத்து கணிப்புக்களால் கூடுதல் பலம் பெற்ற பா.ஜ., தங்களின் ஆட்சி மத்தியில் மலரப் போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதால், அடுத்தக்கட்ட பணிகளை துவக்கி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ளதால், மத்திய அமைச்சரவை பட்டியலை தயாரிப்பதற்காக மோடி தலைமையில் பா.ஜ., தலைவர்கள், காந்திநகரில் உள்ள மோடியின் வீட்டில் கூடி ஆலோசித்து வருகின்றனர். மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


அத்வானிக்கு வாய்ப்புக்கள் :


கட்சியின் மூத்த தலைவரான அத்வானிக்கு பா.ஜ., தரப்பில் 3 வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. லோக்சபா சபாநாயகர், லோக்சபா பா.ஜ., தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் ஆகிய ஏதாவது ஒன்றை அத்வானி அவர் விருப்பப்படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என பா.ஜ., கூறி உள்ளது. கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், தான் மத்திய அமைச்சரவையில் இடம்பெற போவதில்லை என கூறி இருந்தாலும் அவருக்கு முக்கிய துறை ஒன்றை ஒதுக்க உள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சுஷ்மா புறக்கணிப்பு :


பா.ஜ., தலைவர்கள் பலர் மோடியை சந்தித்து பேசி வரும் நிலையில், மோடி உடனான ஆலோசனை கூட்டத்தை அத்வானியின் தீவிர ஆதரவாளரான சுஷ்மா சுவராஜ் புறக்கணித்துள்ளார். போபால் செல்ல வேண்டியிருப்பதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என காரணம் கூறி உள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனது நிலைப்பாட்டை கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தலாம் என்று சுஷ்மா கருதுவதாக கூறப்படுகிறது.
பா.ஜ., தெளிவான பெரும்பான்மை பெரும் என்பதால் அமைச்சரவை பட்டியலை தயாரித்து, மே 20ம் தேதி புதிய பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., தலைமை மோடி தலைமையிலான அமைச்சரவை பட்டியலை ஏற்கனவே பா.ஜ.,விடம் அளித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.