தள்ளாடும் வயதில் திவாரி இரண்டாவது திருமணம்

மூத்த தலைவர்களில் ஒருவரான, என்.டி.திவாரி, இளம் வயதில் காதலித்து, பின் கைவிட்ட பெண்ணை, தற்போது, மனம் மாறி திருமணம் செய்துள்ளார்.காங்., மூத்த தலைவர்களில் ஒருவர் என்.டி.திவாரி, 88. உ.பி., முன்னாள் முதல்வர், ஆந்திர கவர்னர் போன்ற உயர் பதவிகளை வகித்தவர். ஆந்திர மாநில கவர்னராக இருந்தபோது, இளம் பெண்களுடன், இவர், உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இதையடுத்து, பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.                                      

சந்திக்க விடாமல்...:

இவருக்கு, சுசிலா என்ற பெண்ணுடன் திருமணமானது. 1993ல், சுசிலா இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. திவாரி, இளம் வயதில் உஜ்வாலா சர்மா, 67, என்ற பெண்ணை காதலித்தார். இவர்களுக்கு, ரோகித் சேகர், 32, என்ற மகன் உண்டு. ஆனால், உஜ்வாலா சர்மாவை தன் மனைவியாகவும், ரோகித் சேகரை, தன் மகனாகவும் ஏற்க, திவாரி மறுத்தார். இதனால், ரோகித் சேகர், திவாரி தான், தன் தந்தை என்பதை நிரூபிப்பதற்காக, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டு, சட்ட போராட்டத்துக்கு பின், சமீபத்தில், ரோகித் சேகர், தன் மகன் என்பதை, திவாரி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, திவாரியை சந்திப்பதற்காக, உஜ்வாலா சர்மா, சமீபத்தில், டில்லியில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்றார். திவாரிக்கு நெருக்கமானவர்கள், அவரை சந்திக்க விடாமல், உஜ்வாலா சர்மாவை விரட்டி அடித்தனர்.

'மகிழ்ச்சி அளிக்கிறது':

இதனால், திவாரி வீடு முன், அவர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, திவாரியுடன், உஜ்வாலா சர்மாவை சந்திக்க அனுமதி அளித்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, உ.பி., மாநிலம் லக்னோவில் உள்ள தன் வீட்டில், உஜ்வாலா சர்மாவை, திவாரி, நேற்று, முறைப்படி திருமணம் செய்தார். இதில், திவாரியின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். உஜ்வாலா சர்மா, புது மணப் பெண் போல் உடையணிந்து, கைகளில் மருதாணி வைத்திருந்தார். அவர் கூறுகையில், ''திவாரி, என்னை முறைப்படி, அவரின் மனைவியாக அங்கீகரித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார். இந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில், பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.