நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் யார் யார்

புதிய அரசு அமைப்பது தொடர்பாக, பா.ஜ., தலைவர்கள் இடையே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமராக பதவி யேற்க உள்ள, நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் யார் யார் என்பது குறித்து, நாளை முடிவு செய்யப்படும். அதே நேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு, லோக்சபா சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

                                     
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 282 இடங்களில் தனித்து வெற்றி பெற்ற, பா.ஜ., தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. அதனால், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக, ஆலோசனை நடந்து வருகிறது.

காசியில் வழிபாடு
நேற்று முன்தினம், வாரணாசி சென்று, அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து, காசி விஸ்வ நாதர் கோவிலில் வழிபாடு நடத்திய பின், டில்லி திரும்பிய நரேந்திர மோடி, அங்குள்ள குஜராத் பவனில் தங்கினார். நேற்று மதியம், அவர், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து, அவருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை தொடர்பாக, அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை 

என்றாலும், தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:மத்தியில் அமைய உள்ள, புதிய அரசு தொடர்பாகவும், அதில் இடம் பெற்ற வேண்டிய நபர்கள் குறித்தும், அத்வானியும், மோடியும் ஆலோசித்து உள்ளனர்.

அத்வானிக்கு என்ன பதவி?
மேலும், பா.ஜ., கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி, மோடி பிரதமராக பதவி ஏற்ற பின், அவருக்கு கீழ் அமைச்சராக பணியாற்றுவது என்பது இயலாத காரியம். அதனால், அவருக்கு, லோக்சபா சபாநாயகர் போன்ற, அரசியல் சட்ட ரீதியான பதவி வழங்குவது குறித்து, இருவரும் பேசியிருக்க வாய்ப்பு உள்ளது.சபாநாயகர் பதவி கிடைத் தால், அத்வானி சுயேச்சையாக செயல்பட முடியும். \

அத்துடன், அரசு விவகாரங்களில், அவரின் தலையீடும் குறையும் என்பது, பா.ஜ., மூத்த தலைவர்களின் எண்ணம். புதிய அரசு அமைப்பதில், ஆர்.ஆர்.எஸ்., அமைப்பின் தலையீடும் இருக்கும். அப்படி இருந்தால், நேர்மை யான நபர்கள் பதவிக்கு வர வாய்ப்பு உள்ளது. மோடி தலைமையில் அமையும் அமைச்சரவை, குறைந்த அளவிலான அமைச்சர்களை உடையதாக இருக்கும். சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, முக்தர் அப்பாஸ் நக்வி, ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி போன்றோர், முக்கிய இலாகாக்களின் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர்.

ஜெட்லிக்கு பதவி உண்டு

லோக்சபா தேர்தலில்,அமிர்தசரஸ் தொகுதியில் போட்டி யிட்டு, அருண் ஜெட்லி தோல்வி அடைந்திருந்தாலும், அவருக்கு நிச்சயம் முக்கிய அமைச்சர் பதவி தரப்படும்.மோடி அமைச்சரவையில் இடம் பெறும் நபர்கள் குறித்த பட்டியல், நாளைக்குள் இறுதி செய்யப்பட்டு விடும்.இவ்வாறு, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பா.ஜ., பார்லிமென்டில் கட்சி கூட்டம், நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், பார்லிமென்ட் கட்சித் தலைவர் மற்றும் பிரதமராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுகிறார்.அப்படி தேர்வு செய்யப்பட்டதும், அவர் பிரதமராக பதவியேற்கும் நாளும், அமைச்சர்களாக யார் யார் இடம் பெறுவர் என்பது குறித்த பட்டியலும் வெளியாகலாம்.

மோடி - எடியூரப்பா சந்திப்பு
டில்லி குஜராத் பவனில் தங்கியிருந்த, புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியை, நேற்று காலை, கர்நாடக முன்னாள் முதல்வர், எடியூரப்பா, அம்மாநில பா.ஜ., மூத்த தலைவர், அனந்தகுமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர். மத்தியில் அமைச்சரவை தொடர்பான கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்திருக்கலாம் என, நம்பப்படுகிறது.அதேபோல், பீகாரில், பாஜ., உடன் கூட்டணி அமைத்து, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்ற, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர், ராம்விலாஸ் பஸ்வான், தன் மனைவி மற்றும் மகன் சிரக் உடன், மோடியை சந்தித்துப் பேசினார். 

ராஜஸ்தான் முதல்வர், வசுந்தரா ராஜேயும் மோடியை சந்தித்தார்.இவர்கள் தவிர, நாகா மக்கள் முன்னணி தலைவர், நீபியூ ரிரோ, பீகார் மாநில, பா.ஜ., விவகாரங்களை கவனிக்கும்,கட்சியின் பொதுச் செயலர், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் மோடியை சந்தித்துப் பேசினர்.

ஆர்.எஸ்.எஸ்., சுறுசுறுப்பு

நரேந்திர மோடியை, தலைவர்கள் பலர் சந்தித்த நேரத்தில், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்களான, அருண் ஜெட்லி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர், ராம் லால் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.அதேபோல், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை, அந்த அமைப்பின் டில்லி அலுவலகத்தில், பா.ஜ., மூத்த தலைவர்கள், வெங்கையா நாயுடு, கல்ராஜ் மிஸ்ரா, ஹர்ஷ் வர்த்தன், கோபிநாத் முண்டே, ராஜீவ் பிரசாத் ரூடி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்குப் பின், டில்லி பா.ஜ., தலைவரான, ஹர்ஷ் வர்த்தன், நிருபர்களிடம் பேசியதாவது:ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்திற்கு, பா.ஜ., தலைவர்கள் அவ்வப்போது செல்வது வழக்கம். அதுபோலவே இன்றும் சென்றோம். அமைச்சரவை அமைக்கும் விவகாரத்திற்கும், எங்களின் சந்திப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.