ஜனாதிபதி மாளிகை இரும்புக்கோட்டை ஆகிறது

மோடி பதவி ஏற்பு விழாவுக்காக ஜனாதிபதி மாளிகை, இரும்புக்கோட்டை ஆகிறது. இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

                                 
மோடி பதவி ஏற்பு விழா

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அமோக வெற்றி பெற்று, பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து நாட்டின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுதினம் (26–ந் தேதி) மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். இதற்கான கோலாகல விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் சிறப்பாக நடக்கிறது.

இந்த விழாவில் இதுவரை இல்லாத வகையில், ‘சார்க்’ என்னும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருவது இன்னும் முடிவாகவில்லை. வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மோடி பதவி ஏற்பு விழா நேரத்தில் ஜப்பான் செல்வதால் அவரது சார்பில், அந்த நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் ஷிரின் சவுத்ரி பங்கேற்கிறார்.மேலும் விழாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் உள்ள தலைவர்கள்

பிரதமர் பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடி, நாட்டின் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோரும் தீவிரவாத அச்சுறுத்தல்களின் கீழ் உள்ளவர்கள்.இதன் காரணமாக நரேந்திர மோடி பதவி ஏற்பு விழா நடக்க உள்ள ஜனாதிபதி மாளிகை. காற்று கூட புக முடியாத அளவுக்கு பாதுகாப்புமிக்க இரும்பு கோட்டை போன்று மாற்றப்படுகிறது. ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், மத்திய அரசின் தலைமைச்செயலகம், மத்திய மந்திரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள சவுத் பிளாக், நார்த் பிளாக் பகுதிகள் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பகுதிகளாக உள்ளன.

5 ஆயிரம் போலீஸ் குவிப்பு

இந்த நிலையில் மோடி பதவி ஏற்பு விழாவில், குடியரசு தின விழா அணிவகுப்பின்போது வழங்கப்படுகிற பாதுகாப்பை போன்றதொரு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஜனாதிபதி மாளிகையின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ரேடாரில் சிக்காத படிக்கு, தாழ்வாக ஆளில்லாத விமானங்கள், பொம்மை விமானங்கள் கூட பறந்து விடாதபடிக்கு இந்திய விமானப்படையின் வான்பாதுகாப்பு பிரிவு தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். அதுமட்டுமின்றி விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் முக்கிய இடங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டு விட்டன.

சிறப்பு ஏற்பாடு

விழாவில் பங்கேற்கிற பிரமுகர்களின் பாதுகாப்பு, டெல்லி போலீசாரின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அவர்களது நாட்டில் உள்ள பாதுகாப்பு முகமைகளுடன் ஆலோசித்து தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.பிரமுகர்களிடம் சோதனை நடத்த முடியாது என்பதால் அவர்களை அடையாளம் காண்பதற்கு பாராளுமன்ற அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டு புரோட்டா கால் (வரவேற்பு) அதிகாரிகள், முக்கிய வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள் ஆகியோரை பணியமர்த்த சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

விழாவில் கலந்துகொள்கிற பிரமுகர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு, வாகனங்கள் நுழைவதற்கு, வெளியேறுவதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கட்டிடங்களின் மீது துப்பாக்கி சுடும் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்லுகிற சாலைகள் அனைத்தும் மூடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.ஜனாதிபதி மாளிகையில் விழா ஏற்பாடுகள் நடப்பதின் காரணமாக இன்றும், நாளையும் சுற்றுலா பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும். யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.