வி.ஏ.ஓ. விண்ணப்பங்கள் பெறப்பட்டதா? இணையதளத்தில் தகவல் அறியலாம்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதா? என்பதை அறிவதற்கான தகவல் தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு                                                     

தமிழகத்தில் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 வி.ஏ.ஓ. பணி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுத 9.95 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை பதிவு செய்து, விண்ணப்பம் தேர்வாணையத்தால் பெறப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டாம். அத்தகைய விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதுடன், தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு (contacttnpsc@gmail.com) வரும் 23-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.