யாருக்கு எத்தனை சீட் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்?

தேர்தல் திருவிழா கனஜோராக நடந்து வருகிறது. ரிசல்ட்டுக்கான கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது. அனல் பறக்க பிரசாரம் செய்த தலைவர்கள் இப்போது ரிலாக்ஸ். இருந்தாலும், யார் ஜெயிப்பார்கள் என்ற பரபரப்பு பட்டிதொட்டி எங்கும் எதிரொலிக்கிறது. புள்ளிவிவரக் கணக்குப் போட்டு அரசியல் விமர்சகர்கள் ஆராய்ந்துக்கொண்டிருக்க... ஜோதிடம் என்ன சொல்கிறது? அதை ஏன் விட வேண்டும். கேட்போமா?
                                                  
''தேசிய தலைவர்கள் பத்தி என்ன வேணும்னாலும் கேளுங்க... தமிழகத் தலைவர்கள் பத்தி வேணாமே!'' என்று பல ஜோதிடர்களும் ஜகா வாங்கினார்கள். சில ஜோதிடர்களோ, ''என்னோட ஜாதகத்தையும் இப்ப நீங்க கேள்வி கேட்கிற நாளையும் வெச்சு கணிக்கிறப்ப, தலைவர்களுக்கு ஜோதிடம் சொன்னா எங்களுக்குப் பல்வேறு பிரச்னை ஏற்படும்னு கட்டம் சொல்லுது'' என்று அலறி பின்வாங்கினார்கள். இருந்தும் மனம் திறந்த சில ஜோதிடர்களின் கணிப்புகள் இங்கே...முதலில் கே.பி.வித்யாதரன்...

                                                     

நரேந்திர மோடி:

''இந்தத் தேர்தல் பி.ஜே.பி-க்கு அதிகபட்ச வெற்றியை அள்ளித் தரும் தேர்தலாக இருக்கும். மோடியின் ஜாதகம் வலுவாக இருப்பதால், தமிழக பி.ஜே.பி. கூட்டணிக்கு புதிய வாக்காளர்களின் வாக்குகளால் 10 முதல் 15 நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்திய அளவில் இந்தக் கூட்டணி மூன்றில் இரு மடங்கு தொகுதிகளைக் கைப்பற்றும். பி.ஜே.பி. தனிப் பெரும்பான்மையும் பெறும். செவ்வாயும் குருவும் நட்சத்திர சார பரிவர்த்தனைப் பெற்றிருப்பதாலும், லக்னமும் லக்னாதிபதியும் குரு சாரம் பெற்றிருப்பதாலும், பாரதப் பிரதமராகும் வாய்ப்பு இவருக்குப் பிரகாசமாக உள்ளது. இந்தியாவின் சுதந்திர தின ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போதும், பி.ஜே.பி. ஆட்சியில் அமரும் வாய்ப்பு உள்ளது. பதவி ஏற்று செப்டம்பர் மாதம் வரை கடுமையான சவால்கள், பிரச்னைகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை புதிய அரசு சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். பல சவால்களை கடந்தும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வார்.''

ராகுல் காந்தி:

''தற்சமயம் இவருக்கு சந்திர தசையில் புதன் புத்தி நடைபெறுகிறது. சந்திரன் நீசபங்க ராஜயோகம் அடையாமல் நீசம் மட்டும் பெற்றிருப்பதால், இந்தத் தேர்தலில் இவரை முன்னிலைப்படுத்தும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவும். 100 இடங்களில் வெற்றி பெறுவதே கடினம். ஆனாலும், தற்சமயம் புதன் புத்தி நடைபெறுவதால், காங்கிரஸ் கட்சியில் இவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். இவரைப் பிரதானப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகள் நாடெங்கும் பின்னர் மாற்றம் செய்யப்படுவார்கள். இவருடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடெங்கும் கட்சி பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். இவரது ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் லக்னத்துக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், திருமண வாழ்க்கை இவருக்கு சுகப்படாது. இவரது ஜாதக அமைப்பைப் பார்க்கும்போது இவரது சகோதரி பிரியங்காவுக்கு 10.11.2017 முதல் செவ்வாய் தசை தொடங்குவதால், அவர் அதுமுதல் தீவிர அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.''

ஜெயலலிதா:

''தன் சிம்ம ராசிக்கு சந்திராஷ்டம நாளில் பிரசாரத்தைத் தொடங்கியதாலும், தற்சமயம் பாதகாதிபதி தசை நடைபெற்று வருவதாலும் 40 என்ற இலக்கை எட்ட முடியாமல் போகிறது. இந்தத் தேர்தல் நிகழ்ந்த நாளன்று மதியம் மணி 1.38 வரை இவரது நட்சத்திரத்துக்கு பகைத் தாரையில் சந்திரன் சென்றதாலும், அதன் பின்னர் மதியம் மணி 1.39 முதல் உதவித் தாரையில் சந்திரன் சென்றதாலும் இவருக்குக் கிடைக்கும் ஆதரவு ஓட்டுகள் குறையும். கிடைக்கும் வாக்குகள் பல வகையிலும் சிதறும். குரு லாப வீட்டில் நிற்பதால், கௌரவமான வெற்றியை இவரால் பெற முடியும். அ.தி.மு.க-வுக்கு 13 முதல் 18 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது.''

கருணாநிதி:

''சூரியன், சந்திரன் பலமாக இருப்பதால், மூன்று தலைமுறையைத் தாக்குப்பிடிக்கும் சக்தி இவருக்குக் கிடைத்துள்ளது. தேர்தல் நாளன்று உள்ள கிரக அமைப்புகளை இவரது மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசியுடன் ஆராயும்போது... இவரது ராசிக்கு 5-ல் புத்திர ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரமாகி நிற்பதால் ஒரு மகனால் பிரச்னையும், புத்திரக்காரகன் குரு 2-ல் சாதகமாக நிற்பதால் மற்றொரு மகனால் நிம்மதியும் இவருக்கு ஏற்படுகிறது. தேர்தல் நாளன்று ஜென்மத் தாரையில் சந்திரன் செல்வதால், தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. நான்கு முதல் எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.''

விஜயகாந்த்:

''சித்திரை நட்சத்திரம், துலா ராசியில் பிறந்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ராசிக்கு 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், இந்தத் தேர்தலில் ஒருசில இடங்களைப் பிடிப்பதே கடினம். ஆனால், அவருக்கு 9-ல் குரு நிற்பதால், அவரது கட்சிக்கு ஒரு கௌரவம் கிடைக்கும்.''

அடுத்து மாயவரம் ராமேஸ் சுவாமிகள்...

                                                  

நரேந்திர மோடி:

''மோடியை முன்னிலைப்படுத்தி பி.ஜே.பி. இயங்குவதால், அந்தக் கட்சிக்கு 240-ல் இருந்து 260 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும். டெல்லியில் பல குழப்பங்கள் ஏற்பட்டு பல சிக்கல்களுக்குப் பின்பு மோடி பிரதமர் ஆவார். வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி நடைபெறும் குருப்பெயர்ச்சிக்குப் பின்பு மோடிக்கு எதிர்ப்புகள் குறைந்து, அவரைச் சுற்றி உள்ள சூழ்ச்சிக்காரர்கள் முன்னிலையிலும் தன்னை பிரதமராக நிலைநிறுத்திக்கொள்வார். இரண்டு ஆண்டுகள் வரை மோடியின் ஆட்சியில் சோதனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை மக்களுக்கு ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் அரசியல் கிரகமான சூரியனுக்கும், பெயர், புகழ் தரக்கூடிய குருவுக்கும், இடையூறு ஏற்படுத்தக் கூடிய கிரகமான சனீஸ்வரனுக்கும், மோடி முன்கூட்டியே தமிழ்நாட்டுக்கு வந்து பரிகாரம் செய்துகொண்டால் நிலைமையை சமாளித்து, ஐந்து ஆண்டுகள் வரை பிரதமராக நீடிப்பார். இவர் ஜாதகத்தில் செவ்வாய் வலுபெற்ற காரணத்தினால் திருச்செந்தூர் சென்று முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதி யாகம் செய்துகொண்டால், இவருக்கு நல்லது.''

சோனியா காந்தி:

''சோனியா வழிநடத்துதலில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், இவர் ஜாதகப்படி 120 சீட் பிடிப்பதே கடினம். இந்திய அளவில் பல சவால்களைச் சந்திக்க நேரிடும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு, தான் இழந்த செல்வாக்கை மக்களிடம் படிப்படியாக உயர்த்திக்கொள்வார். வரும் டிசம்பர் மாதம் ஏற்படும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, அரசியலில் இழந்த செல்வாக்கையும், மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கையும் படிப்படியாக உயர்த்திக்கொள்வார். தங்கள் மீதுள்ள கறைகளையும் மூன்று ஆண்டுகளில் போக்கிக்கொள்வார். 2019-ம் ஆண்டு இவருடைய மகன் ராகுல் காந்தி நாட்டின் பிரதமர் ஆவார். காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுக்கும்.''

ஜெயலலிதா:

''தமிழகத்தில் 25 இடங்களுக்கு மேல் கைப்பற்றலாம். ஆனால், பிரதமராகும் வாய்ப்பு குறைவுதான். குரு பகவான் 12-ம் இடத்தில் கடக ராசியில் பெயர்கின்ற காரணத்தினால், அவரால் தமிழக மக்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். மத்தியில் அமைகிற மோடியின் ஆட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால், தமிழக மக்களுக்கும் இவருக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அப்படி அமையாமல் போனால், சில தடங்கல்களைத் தாண்ட வேண்டியிருக்கும். கட்சிக்குள் பிரச்னை உருவாகவும் வாய்ப்புகள் அதிகம்.

சனிப்பெயர்ச்சி காரணமாக சனி பகவான் 4-ம் இடமாகிய எதிர் ஸ்தானத்தில் அமர்வதால், உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். நீதிமன்ற விவகாரத்தில் தண்டனை கிடைக்கலாம். உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர், மலைவாழ் குடிமக்கள், மீனவர்கள், நரிக்குறவர்கள் மற்றும் விதவைகள் எல்லோரும் பயன்பெறும் வகையில் உதவிகளைச் செய்துவந்தால், வரக்கூடிய துன்பங்கள் அனைத்தும் பனிபோல விலகி இவருக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும்.''

கருணாநிதி:

''இந்தத் தேர்தலில் 10 இடங்களைப் போராடி கைப்பற்றலாம். குருப்பெயர்ச்சி காரணமாக இவருக்கும் இவரைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகள் ஏற்படாது. தற்சமயம் சனி பகவான் வக்ரத்தில் இருப்பதால், இவருக்கு உடல் பாதிப்புகள் ஆரோக்கிய குறைபாடுகள் மற்றும் எதிரிகளின் சூழ்ச்சியினால் தொல்லைகள் அதிகம் ஏற்படும். சனிப்பெயர்ச்சி காரணமாக களத்திர புத்திர ஸ்தானத்தில் சனீஸ்வரன் வருவதால், இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும். அதற்குள் சனி பகவான் மற்றும் இதர கிரகங்களுக்குப் பரிகாரம் செய்துகொண்டால் மட்டுமே நன்மைகள் ஏற்படும்.''

வைகோ:

''குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ம் இடமாகிய கடக ராசியில் உச்சம் பெறுகிற காரணத்தினால், இவருக்குப் புதிய தெம்பு, ஆரோக்கியம் மற்றும் பதவிகள் உட்பட பல நன்மைகள் ஏற்படும். சனிப்பெயர்ச்சியும் இவருக்கு மிகப்பெரிய நன்மைகளை உண்டாக்க காத்திருக்கிறது. 2015-ம் ஆண்டு புதன் தசை ஆரம்பிக்கும் காரணத்தால், இவர் ஜாதகத்தில் புதன் வலுப்பெறுவதால், தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். இவரால் இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால், நட்பு வட்டாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.''

அடுத்து விஜயகாந்த்துக்குக் கேட்க, ''அவரது ராசிப்படி அவருக்குத் துன்பங்கள்தான் அதிகம் வர காத்திருக்கிறது. ஒருசில இடங்களில் வெற்றிபெறுவதே கடினம். அவர் துன்பத்தில் இருந்து மீள்வதும் கடினம். ஆகையால், அவரது ஜாதகம் வேண்டாமே!'' என்றார்.

மூன்றாவதாக ஷெல்வி...

                                                      

நரேந்திர மோடி:

''நரேந்திர மோடி விருட்சக ராசி, அனுஷம் நட்சத்திரக்காரர். இவரது ராசிக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறது. அதனால், மோடியை முன்னிலைப்படுத்துவதால் 239 தொகுதிக்கு மேல் கண்டிப்பாக பி.ஜே.பி. வெற்றி பெறும். இவர் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்கும் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜூன் 13 வரையில் மிக கவனமாக எந்த விஷயத்தையும் கையாள வேண்டும். யாரோ எதுவோ செய்வதனால்கூட இவர்மீது பிரச்னை ஏற்படலாம்.

ராகுல் காந்தி:

''இவருடைய விருட்சக ராசிக்கு நீசம் மட்டும்தான் இருக்கிறது. இது பங்கமாகி ராஜயோகத்தைக் கொடுக்கவில்லை. 28.4.13 அன்று சந்திர தசை ஆரம்பித்து உள்ளது. 10 வருட தசையும் நீசமாகி உள்ளது. அதனால், சந்திர தசை முடியும் வரை கவனமாக இருக்க வேண்டும். 2023 வரை ராகுல் பொறுமை காத்தால், அவருக்கு வரும் கெடுதல் எல்லாம் நீங்கிவிடும். சிலரது தவறான ஆலோசனையால், அனைத்தும் கெடவும் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு கருத்து சொல்வதற்கு முன்னும், பலமுறை யோசித்துச் சொல்வது நல்லது. இவருடைய ராசிப்படி காங்கிரஸுக்கு 81 தொகுதிகள் கிடைக்கலாம்.''

மக்கள் கணக்கு இத்தோடு ஒத்துப்போகிறதா எனப் பார்க்க மே 16 வரைக்கும் காத்திருப்போம். மாறிப்போனால் இந்த ஜோதிடர்கள் அப்போது என்ன சொல்வார்களோ?