தொடங்கப்பட்ட விஜய் மில்டன் - விக்ரம் படம்

'கோலி சோடா' படத்தினைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.2014ம் ஆண்டில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் அளித்த படம் 'கோலி சோடா'. விஜய் மில்டன் இயக்கி தயாரித்த இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
                                       

'கோலி சோடா' படத்தினைத் தொடர்ந்து விஜய் மில்டனுக்கு பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து இயக்கும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், அடுத்த படம் குறித்து எந்த ஒரு செய்தியையும் வெளியிடாமல் இருந்தனர்.

தற்போது விஜய் மில்டன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விக்ரம். சமந்தா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது. இமான் இசையமைக்க இருக்கிறார்.

இத்தகவலை இசையமைப்பாளர் இமான் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தங்களது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்திருக்கிறார்கள்.