ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் யார்? காங்கிரசில் எழுந்தது புதிய குழப்பம்

:ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட, காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் விஷயத்தில், அந்த கட்சிக்குள் குழப்பம் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதை அடுத்து, லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ராஜ்யசாபவில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான பலம் உள்ளதால், அங்கு எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில், அக்கட்சிக்கு சிக்கல் ஏற்படாது என கூறப்பட்டது.
                                     

ராஜ்யசபா உறுப்பினராக உள்ள மன்மோகன் சிங் பிரதமராக பணியாற்றியதால், அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க அக்கட்சி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, கரண் சிங்கை 83, எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க கட்சித் தலைமை திட்டமிட்டது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் அந்தோனி, குலாம் நபி ஆசாத், காங்., பொது செயலர்கள் ஜனார்தன் திவிவேதி, திக்விஜய் சிங் ஆகியோரில் யாராவது ஒருவரை, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.லோக்சபாவை பொருத்தவரை, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அல்லது கமல்நாத் ஆகியோரில் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.