வேலைக்கு வாய்ப்பில்லை!

உலகளாகவிய அளவில் வேலை வாய்ப்பின்மை விஸ்வரூபமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. எப்போதெல்லாம், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியும் அதிகரித்து, சட்ட ஒழுங்குப் பிரச்னையும் ஏற்பட்டிருப்பதாக சரித்திரம் உணர்த்துகிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அபாயகரமானது.
                                                    

சர்வதேச அளவில் 15 முதல் 24 வயது இளைஞர்கள் மத்தியிலான வேலை வாய்ப்பின்மை 13.1 விழுக்காடு என்று தெரிவிக்கிறது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.யூ.). இது முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியிலான வேலை வாய்ப்பின்மையைவிட இரண்டு மடங்கு அதிகம். அமெரிக்கப் பொருளாதாரம் அதிகபட்சம் 3.6 விழுக்காடுதான் 2014இல் வளர்ச்சி அடையும் என்கிற நிலையில், இந்த வேலை வாய்ப்பின்மையின் நேரடி விளைவு இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டமாகத்தான் இருக்க முடியும்.

இந்தியாவைப் பொருத்தவரை, இந்தப் பிரச்னை இன்னும் மோசமாக இருக்கும். இந்திய மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 25 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் எனும் நிலையில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் தாக்கம் கடுமையாகவே இருக்கக்கூடும். கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்பதால் மட்டுமே, வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர் கொண்டுவிட முடியாது.

இந்திய அளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு எப்படி இருக்கிறது என்பதை மத்திய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் வெளிச்சம் போடுகிறது.

15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களில் 13.3 விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் பட்டப் படிப்புத் தேர்ச்சி பெற்றவர்களில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார்.

நகர்ப்புற இந்தியாவில் வசிப்போரில் 26 விழுக்காட்டினர் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் வசிக்கும் பட்டப் படிப்புத் தேர்ச்சி பெற்றவர்களில் 36.6 விழுக்காட்டினர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.

ஊரக வேலை வாய்ப்பு பற்றி மிக அதிகமாகக் கவலைப்படும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கிராமப்புறங்களில்தான் வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களின் எண்ணிக்கை மேலதிகமாக இருந்து வருகிறது.

வேலை கிடைக்காமல் இருப்பதன் தொடர்விளைவாக, மேற்படிப்புப் படித்தல் மற்றும் திறமை மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கு பதிலாக இளைஞர்கள் மத்தியில் ஒருவித வெறுப்பும், செயலிழந்த தன்மையும் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

தொழில் துறையின் வளர்ச்சி மந்த நிலையில் தொடர்ந்தால், வேலை இழப்புகள் ஏற்பட்டு, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புதான் காணப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை இன்னொரு முக்கியமான பிரச்னையும் உண்டு. இங்கே பெருவாரியான வேலை வாய்ப்பும் அமைப்பு சாராத் துறைகளில்தான் காணப்படுகிறது. வேலையில் இருப்போரில் 90 விழுக்காட்டினர் அமைப்புசாராத் துறைகளில் இருப்பதால், அவர்களுக்கு எந்தவித அடிப்படை உரிமைகளோ, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகளோ கிடையாது.

வெளிநாடுகளில் காணப்பட்ட அதிகரித்த வேலை வாய்ப்பு இப்போது அறவே குறைந்து விட்டிருக்கிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கருத்துப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உலகளாவிய அளவில் ஆண்டுக்கு இருபது லட்சம் வேலை வாய்ப்புகள் குறைந்தவண்ணம் இருக்கும். ஏற்கெனவே கடந்த 2013இல் மட்டுமே ஐம்பது லட்சம் பேர் வேலையிழந்திருக்கிறார்கள் எனும்போது, வெளிநாடுகளிலான வேலை வாய்ப்புக்கும் அநேகமாக முற்றுப்புள்ளி விழுந்துவிட்ட நிலைமை.

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தால், விவசாயம் நடைபெறாத நாள்களில் வேலை வாய்ப்பும் வருமானமும் உறுதி அளிக்கப்படுகிறது என்றாலும்கூட, அந்த வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்ள படித்த இளைஞர்கள் தயாராக இல்லை என்பதால் இளைஞர்கள் மத்தியிலான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு, அது உதவுவதாக இல்லை. மேலும், விவசாயம், சிறுதொழில்கள், ஏற்றுமதி என்று எல்லா வகையிலும் ஏற்பட்டிருக்கும் மந்த நிலைமை வேலையில்லாத் திண்டாட்டத்தை கணிசமாக அதிகரித்து விட்டிருக்கிறது.

வேலை வாய்ப்பு குறைவதும், இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதும், வெடிக்கத் தயாராகும் எரிமலைக்கு ஒப்பானது. மத்திய அரசில் பதவியில் அமரப் போகும் ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள போகும் மிகப்பெரிய சவால் இதுவாகத்தான் இருக்கும்.